தீரா உலா 3 : பும்லா பாஸில் எழுந்த விபரீத ஆசை..

பும்லா பாஸ் செல்கிற வழி நெடுகிலும் ராணுவ வீரர்களையும் வாகனங்களையும்தான் பார்க்க முடிந்தது. ஆங்காங்கே நீர் நிலைகள் தென்பட்டன. அவை முற்றிலும் பனியால் உறைந்து கிடந்தன.

Aug 18, 2024 - 18:20
Aug 19, 2024 - 20:42
 0
தீரா உலா 3 : பும்லா பாஸில் எழுந்த விபரீத ஆசை..

பும்லா பாஸ் செல்கிற வழி நெடுகிலும் ராணுவ வீரர்களையும் அவர்தம் வாகனங்களையும்தான் பார்க்க முடிந்தது. ஆங்காங்கே தென்பட்ட நீர் நிலைகள் எல்லாம் முற்றிலும் பனியால் உறைந்து கிடந்தன. உறையாத சிறு பரப்பு மட்டும் இளநீல நிறத்தில் தெரிவதைக் கொண்டுதான் அதனை நீர்நிலை என்றே அடையாளம் காண முடிந்தது. பும்லா பாஸை நெருங்கும்போதே பனிப்பொழிய ஆரம்பித்து விட்டது. வாடிக்கையாக வருகிற பாதையென்பதால் அனுபவ முதிர்ச்சியோடு எந்தப் பிசகும் இல்லாமல் ஓட்டுநர் ஸ்கார்பியோவை இயக்கிச் சென்றார்.

பும்லா பாஸை அடைந்த போது அங்கே சுமோ, ஸ்கார்பியோ வகை வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் அணிசேர்ந்து நின்றிருந்தன. பைக்கர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் சாகசங்கள்தான். அவர்கள் விரும்பும் பயணம் என்பது  சவால்கள் நிறைந்த, கடினமான பாதைகளில் நிகழ்த்தப்படுவதுதான். எனவேதான் இமயமலை எப்போதும் அவர்களது இலக்காக இருக்கிறது. ராணுவத்தினரால் நடத்தப்படும் தேநீர் விடுதி மற்றும் ராணுவ முகாம்கள் என சில கட்டடங்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அந்த வெளி முழுவதையும் வெண்மை வியாபித்திருந்தது.

ஸ்கார்பியோவில் இருந்து இறங்கியதுமே நேரே தேநீர் விடுதியை நோக்கிதான் சென்றோம். இக்கடுங்குளிருக்கு ஒரு கோப்பைத் தேநீர் அருந்துவதை விடவா அர்த்தப்பூர்வமான செயல் இருந்து விடப்போகிறது! ஒரு கோப்பைத் தேநீரின் விலை 80 ரூபாய் என்று சொன்னதும் மெல்லதிர்ச்சி எனக்குள் பரவியது. இந்த விடுதியில் எல்லாமே சராசரி விலையைக் காட்டிலும் அதிகம்தான். வெண்டிங் மெஷினில் பிடித்துத் தரப்பட்ட தேநீரில் சூடு குறைவாக இருந்தது. போக அது தேநீர் அல்ல தேநீர் போலச் செய்யப்பட்டது.

சீன எல்லையில் நின்று கொண்டு ஒரு தேநீரின் சுவைக்காகவெல்லாம் அதிருப்தி அடைய விரும்பவில்லை.  ஆகாஷ் சாண்ட்விச் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்க, நான் வெளியே வந்தேன். இந்திய - சீன எல்லையில் ராணுவத் தடுப்புக்கு முன்பாக பயணிகள் குழுமியிருந்ததைப் பார்த்து அங்கே சென்றேன். ராணுவ அதிகாரி ஒருவர் இந்தியில் அவர்களிடம் பெரும் தீவிரத்துடன் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். எனக்கு அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை என்றாலும் அதன் சாரத்தை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.

சீனா, திபெத்தினை ஆக்கிரமித்ததற்குப் பிறகு சீனாவிடமிருந்து இந்த பும்லா பாஸ் எல்லையைப் பாதுகாத்த இந்திய ராணுவத்தின் வரலாற்றை அவர் சொல்லிக் கொண்டிருந்தார். பயணிகள் பெரும் நெகிழ்ச்சியோடு அதனைக் கேட்டுக்கொண்டிருந்தனர். இடையிடையே கைதட்டினர். இந்தி புரியாவிட்டாலும் நானும் அவர்களுடன் கலந்து அந்த உரையைக் கேட்டேன். அரை மணி நேரத்துக்குப் பிறகு அவரது உரையை முடித்துக் கொண்டார். தடுப்புக்கு அப்பால் விரிந்திருந்த பனிக்காடுதான் சீனா. முதல் முறையாக ஒரு அந்நிய நிலத்தைக் கண்ட சாகச உணர்வு மேலோங்க கொஞ்ச நேரம் பனிப்பரப்பில் நடந்து திரிந்தேன்.

எல்லைகள் நம்மால் உருவாக்கப்பட்டதுதானே என்று சொல்லலாம்தான். மனித குல வரலாற்றின் பெரும்பகுதி அந்த எல்லைகளை விரிப்பதும், காப்பதுமாகவே கிடக்கிறது. கடல் மட்டத்திலிருந்து பும்லா பாஸ் 15200 அடி உயரத்தில் இருப்பதைக் குறிக்கும் கல் முன்பாக நின்று ஒவ்வொருவராக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். என்னைப் புகைப்படம் எடுத்துத் தரும்படி ஆகாஷிடம் சொன்னேன். அவனையும் படமெடுத்துக் கொடுத்தேன். தேநீர் விடுதிக்குப் பின்புறத்தில் கழிப்பறை அமைக்கப்பட்டிருந்தது. இருந்தும் பனிப்பரப்பின் மேல் சிறுநீர் கழிக்கவே மனம் உந்தியது. வேண்டாத ஆசைகளையெல்லாம் ஓரங்கட்டி விட்டு கழிப்பறையையே பயன்படுத்தினேன். இன்னொரு விபரீத ஆசையினையும் நிறைவேற்றிக் கொள்ளத் துணிந்தேன்.

கொஞ்ச தொலைவு நடந்து மனிதத் தடம் பதியாத பகுதியிலிருந்து பனியை அள்ளி கண்ணாடி டம்ளரில் இட்டு அதில் ரம்மை ஊற்றினேன். ஒரு மிடறுதான் அருந்தினேன். பல்லே தனியாகக் கழன்று விடுமளவு கிரகிக்க முடியாத குளிர்ச்சி நரம்புகளில் பாய அதை கீழே உமிழ்ந்து விட்டேன். எல்லாம் இந்த இன்ஸ்டா ரீல்ஸால் வந்த விபரீத ஆசை. நண்பகல் 1 மணிக்கெல்லாம் ராணுவ அதிகாரிகள் வந்து பயணிகளைக் கிளம்பச் சொன்னார்கள். ஓட்டுநர்கள் பயணிகளை சீக்கிரத்தில் வரும்படி துரிதப்படுத்தினர். ஒவ்வொரு வாகனமாக அங்கிருந்து கிளம்பிக் கொண்டிருந்தது. நாம் இறுதியில் செல்வோம் என இன்னும் கொஞ்ச நேரத்தை எடுத்துக் கொண்டேன். கண் கூசும் பனிப்பரப்பில் நடந்து கொண்டிருந்தேன்.

எல்லா வாகனங்களும் சென்ற பிறகு இறுதியாக எங்களது ஸ்கார்பியோ கிளம்பியது. ஒப்பந்தப்படி ஆகாஷ் இப்போது முன் இருக்கையில் அமர்ந்து கொண்டான். இதற்கு மேல் போனால் பனி சாலையை மூடி விடும் விளைவு இருப்பதால்தான் இவ்வளவு துரிதப்படுத்துகின்றனர் என ஓட்டுநர் சொன்னார். ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய குறுகிய அந்தப் பாதையில் பின்னால் வருகிற வாகனத்தால் முந்திச் செல்ல முடியாது. இதனாலேயே வாகனத்தை இடையில் எங்கேயும் நிறுத்தாமல் ஓட்டுநர் சென்று கொண்டிருந்தார். பனி மூடி விடும் அபாயத்தையும் அவர் உணர்ந்தே செயல்பட்டார். ஏரி ஒன்றைக் கடக்கையில் அங்கே நிறுத்தும்படி சொன்னேன்.

 நாங்கள் இறுதியாகக் கிளம்பியதால் பின்னால் எந்த வாகனமும் வரவில்லை என்கிற காரணத்தால் அவர் 2 நிமிடங்கள் அவகாசம் தந்து நிறுத்தினார். அங்கே நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். முக்கால்வாசி பனியால் சூழப்பட்டிருந்த அந்த ஏரியைப் பார்த்தபடியே ஆவி மேலெழ தேநீர் அருந்தினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. என்னிடமிருந்த ரம்மை ஆறிய தேநீராக நினைத்து நான்கு மிடறு அருந்தினேன். திரும்பும் வழியில் ஆகாஷிடம் கொஞ்சம் பேச முடிந்தது.

அவன் பட்டய மேற்படிப்புக்கு சென்னையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்திருப்பதாகச் சொன்னான். சென்னை வந்தால் அவசியம் அழைக்கும்படி சொன்ன பிறகு இருவரும் அவரவர் எண்களைப் பரிமாறிக் கொண்டோம். ஓட்டுநரிடம் தவாங்கில் தங்கும் இடம் பற்றி விசாரித்தேன். இணைப்புக் கழிவறையுடன் குறைந்த வாடகையில் ஓர் அறை வேண்டும் என்பதே நோக்கம். தவாங்கில் அரசால் நடத்தப்படும் சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதியில் 400 ரூபாய்க்கே அறை இருக்கிறதென அவர் சொன்னார். நிச்சயமாக இது ஒரு நற்செய்திதான். அடுத்த நாளே அந்த விடுதிக்கு மாறி விடும் முடிவினை எடுத்து விட்டேன்.

தவாங்கை அடைந்த போது மாளாத பசி. கண்மணிகளின் உணவகத்துக்குப் போய் ‘தாளி’ தரும்படி சொன்னேன். என்னைக் கவர்ந்த அந்த மோன்பா பெண்ணிடம் தவாங் அரசு விடுதி குறித்துக் கேட்டதற்கு அவள் அது பற்றி எதுவும் தெரியாது என்றாள். அப்போது பக்கத்துக்கு இருக்கையில் உணவருந்திக் கொண்டிருந்தவர் அவ்விடுதி நன்றாக இருக்கும் என்று சொன்னதோடு ஹீட்டரும் இருக்கும் என்றார்.

இப்போது தங்கியிருக்கும் விடுதி அறையைக் காட்டிலும் நூறு ரூபாய்தான் அதிகம். அடுத்த நாளே அவ்விடுதிக்குச் சென்று விட்டேன். பெரும்பாலான அறைகள் விருந்தினர்கள் இன்றிக் கிடந்தன. எனக்குத் தரப்பட்ட அறையில் உள் நுழந்ததுமே வலப்புறத்தில் கழிவறையுடன் இணைந்த குளியலறை இருந்தது. அதில் ஹீட்டர் பொருத்தப்பட்டிருந்தது. படுக்கையை ஒட்டியிருந்த ஜன்னலைத் திறக்கையில் பனிமூட்டம் விடுதியைச் சூழ்ந்திருந்தது.

உலவித் திரிவோம்..

கி.ச.திலீபன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow