பயணிகளுக்கு குட் நியூஸ்.. சென்னை கடற்கரை-தாம்பரம் புறநகர் ரயில் சேவை சீரானது!
தாம்பரம் ரயில் நிலைய யார்ட் மறுசீரமைப்பு பணிகள் ஒருநாள் முன்னதாக, அதாவது இன்றே முடிவடைந்துள்ளது. வழக்கமான அட்டவணைப்படி சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு ரயில்கள் இயங்க தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: சென்னை நகரில் சென்ட்ரல், எழும்பூர் என இரண்டு பிரதான ரயில் நிலையங்கள் உள்ளன. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வட இந்திய நகரங்களுக்கும், சேலம், கோவை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர சென்னையின் 3வது முனையமாக இருக்கும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி, ஹைதராபாத்துக்கும், செங்கோட்டை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கும் ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன.
இது தவிர எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இதற்கிடையே தாம்பரம் ரயில் நிலையத்தில் யார்ட் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக கடந்த ஜூலை 23ம் தேதி முதல் ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே செய்து இருந்தது. * தாம்பரம் - நாகர்கோயில் இடையே இயக்கப்படும் முழுவதும் முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட அந்தியோதயா விரைவு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
மேலும் மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ், திருச்சி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன. மறுமார்க்கமாக செங்கல்பட்டுடன் நிறுத்தப்பட்டன. மேலும் சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்களை தெற்கு ரயில்வே செய்து இருந்தது.
ஜூலை 23ம் தேதி முதல் நேற்று வரை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே தினமும் 50க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில குறிப்பிட்ட இடைவெளியில் சென்னை கடற்கரை-பல்லாவரம், பல்லாவரம் - சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. சென்னையின் முதுகெலும்பான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு சிறப்பு ரயிலே இயக்கப்பட்டதால் சிறப்பு மின்சார ரயில்களில் கூட்டம் அலைமோதியது. வயதானவர்கள், பெண்கள் ரயில்களில் ஏற முடியாமல் சிரமப்பட்டனர். முதலில் ஆகஸ்ட் 15ம் தேதி வரை மின்சார ரயில்களை ரத்து செய்திருந்த தெற்கு ரயில்வே, பின்பு அதை ஆகஸ்ட் 19ம் தேதி (நாளை) நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் பயணிகள் விரக்தி அடைந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலைய யார்ட் மறுசீரமைப்பு பணிகள் ஒருநாள் முன்னதாக, அதாவது இன்றே முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் மீண்டும் வழக்கம்போல் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. வழக்கமான அட்டவணைப்படி சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு ரயில்கள் இயங்க தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் வழக்கம்போல் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இது பயணிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
What's Your Reaction?