பர்மா எல்லையில் அம்மன் தரிசனம் - தீரா உலா ~ 7

அசாம் மாநிலத்தில் இருந்து நாகலாந்து மாநிலம் கோஹிமா வழியாக மணிப்பூர் மாநிலத்தின் மியான்மர் எல்லையில் உள்ள நகரான மோரோவுக்குச் சென்ற அனுபவம் குறித்து இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

Sep 15, 2024 - 06:00
Sep 16, 2024 - 16:50
 0
பர்மா எல்லையில் அம்மன் தரிசனம் - தீரா உலா ~ 7
theera ula 7


அபினவ்வின் விருந்தாளியாக தேஸ்பூரில் மூன்று நாள்கள் உண்டு கழித்ததற்குப் பிறகு அங்கிருந்து கிளம்பினேன். தேஸ்பூரில் இருந்து நேரே திமாபூர் பேருந்து ஏறினேன். அங்கிருந்து கோஹிமா சென்று அப்படியே மணிப்பூர், மிசோரம், திரிபுரா எனப் பரவிச்செல்ல வேண்டும் என்கிற திட்டம் இருந்தது. திமாபூர் நோக்கிய பயணத்திலேயே அன்றைய பகல் பொழுது தீர்ந்து போனது. மாலை 4 மணிக்கு திமாபூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டேன். பேருந்து நிலையத்துக்கு வெளியே உள்ள பிரதான சாலையைக் கொத்திப் போட்டிருந்தார்கள் என்பதால் அப்பகுதியே புழுதிக்காடாக இருந்தது. பேருந்து நிலையத்தை ஒட்டியிருந்த நடப்பதற்கான மேம்பாலம் ஒன்று கைவிடப்பட்ட துயரத்தைப் போல நின்றிருந்தது. அதன் மேல் ஏறிப் போகையில் இடைவெளி விட்டு நின்றிருந்த இரண்டு பெண்கள் என்னிடம் இந்தியில் ஏதோ சொல்லிக் கூப்பிட்டனர். இந்தி புரியாவிட்டாலும் அவர்கள் எதற்காகக் கூப்பிடுகின்றனர் என்பது மட்டும் புரிந்தது.   அவர்களது ஆடைகள் அழுக்கேறியிருந்தன. தாளாத துயர் ஒன்றினை விழுங்கிச் செரிக்க முடியாதவர்களைப் போல் நின்றிருந்தனர். வறுமைதான் எவ்வளவு துயரமானது. நான் எதுவும் பேசாமல் அவர்களைக் கடந்து போனேன்.       

திமாபூரில் இருந்து கோஹிமா செல்லும் பேருந்து அந்த நேரத்தில் இல்லை. நிலையத்தின் உள்ளேயே டாடா சுமோக்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. அவற்றில் கோஹிமா செல்ல 300 ரூபாய் வாடகையாக வசூலிக்கப்படுகிறது. முன்னிருக்கையில் அமர்ந்து ஒன்றரை மணிநேரம் காத்திருந்த பிற்பாடு வண்டி கோஹிமா நோக்கிப் புறப்பட்டது. கடந்த ஆண்டு வந்த போது திமாபூர் - கோஹிமா ரயில் பாதைக்கான பணிகள் நடந்து கொண்டிருந்தன. இந்த ஆண்டும் அது தொடர்ந்தது. இரண்டு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு கோஹிமாவை அடைந்தேன். கடந்த ஆண்டு தங்கிய அதே விடுதிக்குச் சென்று அறை வாடகைக்குக் கேட்டேன். மேலாளர் பூபூ மட்டும் அங்கே அப்படியே இருந்தார். கடந்த ஆண்டு எனக்குக் கொடுத்த அதே அறையைக் கொடுத்தார் என்றாலும் 200 ரூபாய் வாடகை கூடுதலாக வாங்கினார் என்பது சற்று சங்கடமாக இருந்தது. அந்த விடுதியிலேயே இரவு உணவாக சாப்பாடு, பன்றி வறுவல் சாப்பிட்டேன். வடகிழக்கு இந்தியாவில் பன்றி இறைச்சிக்கு முக்கிய இடமுண்டு. சென்ற முறை வந்த போது இந்த விடுதியில் பணியாற்றிய ஒரு நாகாமிப் பெண் என்னை மிகவும் ஈர்த்தாள். அவளைப் பற்றி முந்தைய பயணநூலில் குறிப்பிட்டிருப்பேன். அவளை இம்முறை சந்திப்பேன் என்றுதான் நினைத்திருந்தேன். அந்த விடுதியில் எங்கு தேடியும் அவளைக் காணவில்லை. அவளது பெயர் தெரியாததால் விசாரிக்கவும் முடியவில்லை.

அடுத்த நாள் பகலில் நன்றாக ஓய்வெடுத்து விட்டு மாலையில் அந்நகரைச் சுற்றி வந்தேன். நடைபாதைக் கடைகளில் உயிருடன் தவளைகளைக் கட்டி விற்பனைக்கு வைத்திருந்தனர். கொழுத்த பச்சைத் தவளைகள்.  விசாரிக்கையில் கறிக்காக விற்பனை செய்வதாகச் சொன்னார்கள். இவர்களது உணவுப் பழக்கம் சீனர்களின் உணவுக் கலாச்சாரத்தை ஒத்திருப்பதை கவனிக்க முடிந்தது. தவளைக்கறி என்று சொன்னால் சட்டென நமக்குச் சீனர்கள்தானே நினைவுக்கு வருகிறார்கள். பெரிதும் அறியப்படாத தகவல் ஒன்றுண்டு.      தவளைக்கறி குறித்து நியூயார்க் டைம்ஸில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. ஐரோப்பாவுக்கு தவளைகளை ஏற்றுமதி செய்யும் முதன்மையான 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐரோப்பாவில் சிக்கன் அளவுக்கு தவளைக்கறி விரும்பி சாப்பிடப்படுகின்றன. ஐரோப்பியர்களின் அதிகபட்ச நுகர்வால் தவளை இனங்களே அழியும் அபாயம் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். ஆகவே, வகை தொகை இல்லாமல் எந்தக் கறியாயினும் சாப்பிடுபவர்கள் என சீனர்களை மட்டுமே நினைக்க வேண்டாம். மூன்று தவளைகள் 500 ரூபாய் என்று சொன்னார்கள். ஒப்பீட்டளவில் கோழிக்கறியை விட தவளை விலை கூடுதல்தான். 

அடுத்த நாள் கோஹிமாவில் இருந்து மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரான இம்பாலுக்குப் பேருந்தில் போனேன். மணிப்பூர் எல்லையில் பேருந்து நுழைந்ததும் Inner Land Permit (ILP) வாங்கும்படி சொன்னார்கள். வடகிழக்கு மாநிலங்களில் சிலவற்றுக்கு மட்டும் இந்த பெர்மிட் தேவைப்படுகிறது. அசாம், நாகாலாந்து, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களில் கேட்கவில்லை. அருணாச்சல பிரதேசத்துக்கும், மணிப்பூருக்கும்  தேவை. சோதனை மையத்துக்குச் சென்று ஆதார் அட்டையைக் காண்பித்தேன். இம்பாலில் எங்கு தங்குகிறீர்களோ அந்த விடுதியின் முகவரி வேண்டும். இல்லையேல் உங்களுக்குத் தெரிந்த மணிப்பூர்வாசியின் பரிந்துரையின் பேரில்தான் ILP வழங்க முடியும் என்றார் அலுவலர். நான் இம்பால் போன பிறகுதான் விடுதியே தேட வேண்டும். யூத் ஹாஸ்டல் இம்பாலில் இருக்கிறது. நான் யூத் ஹாஸ்டலில் தங்கப்போவதாகக் கூறினேன். முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்றார். இவ்வளவு கறாரான நடைமுறைகள் தேவையில்லை என்றே நினைக்கிறேன். மாவோயிஸ்டுகள் காரணமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக இருக்கலாம். திரிபுராவில் இன்னும் கடுமையாக இருக்கும் என நினைக்கத் தோன்றியது. நான் ஓர் எழுத்தாளன் மற்றும் பத்திரிகையாளன். மணிப்பூர் பயணம் குறித்து எழுத வந்திருக்கிறேன் எனச் சொல்லிய பிறகு எனக்கு பெர்மிட் வழங்கினர். 

பேருந்தில் எனக்குப் பின்புற இருக்கையில் உட்கார்ந்திருந்த ஒரு மணிப்பூர்வாசி என்னிடம் தமிழில் பேசினார். தடுமாற்றம் கொஞ்சம் இருந்தாலும் சரளமாகவே தமிழ் வந்தது அவருக்கு. சென்னையில் சில காலம் தங்கி கட்டட வேலை பார்த்ததாகச் சொன்னார். சாலை வழியாக மியான்மர் செல்வதற்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என அவரிடம் கேட்டேன். மோரே சென்றீர்கள் என்றால் அங்கிருந்து மியான்மர் செல்லலாம் என்று சொன்னார். மொரே என்பது இந்திய - மியான்மர் எல்லையில் அமைந்திருக்கும் நகரம். எல்லைப்பகுதிகளைப் பொருத்த வரை இரு வேறு நிலப்பரப்புகளின் கலாச்சாரமும், வாழ்வியலும் ஒன்றோடொன்று முயங்கிக் கிடக்கும். என்னைப் போன்றப் பயணிகளுக்கு மணிப்பூரில் இம்பாலைக் காட்டிலும் மொரே முக்கிய நகரம். 
மொரே-வில் இருந்து மியான்மருக்கு உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து சாலை வழியாகவே செல்லலாம் என்று அவர் சொன்னார். அது சாத்தியமா என்பதை நேரில் சென்றால்தான் தெரியும். மியான்மர் செல்ல வேண்டும் என்கிற திட்டம் இப்பயணம் தொடங்கும் முன்பே இருந்தது. சாலை வழியாகப் பயணம் சாத்தியப்பட்டால் மகிழ்ச்சி என்று நினைத்தேன். 

இம்பாலில் உள்ள யூத் ஹாஸ்டலில் 400 ரூபாய் வாடகைக்கு அறை கிடைத்தது. பதிவு செய்ததும் மணிப்பூர் சுற்றுலாத் தல விவரங்களைக் கொண்ட கையேட்டைக் கொடுத்தனர். பாங்காங் ஏரிக்குப் போக வேண்டும் என்று அபினவ் சொல்லிக் கொண்டிருந்தான். அந்தக் கையேட்டில் அச்சிடப்பட்டிருந்த வண்ணப்படத்தைப் பார்த்த பிறகு எனக்கும் பாங்காங் ஏரிக்குப் போகும் யோசனை வந்தது. மோரே சென்று மியான்மரை அடைய வேண்டும் என்பதே முதன்மைக் குறிக்கோளாக இருந்ததால் மோரேவில் இருந்து திரும்புகையில் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து பாங்காங் ஏரி செல்லும் திட்டத்தை அப்போதைக்குக் கைவிட்டேன். இம்பால் நகரத்தில் பார்க்க என்ன இருக்கிறது என்று விசாரித்த போது இமா சந்தைக்குக்குப் போய்ப் பார்க்கும்படி சொன்னார்கள். 

இமா என்றால் அம்மா. 3 ஆயிரம் பெண்களால் அந்த சந்தை நடத்தப்பட்டு வருகிறது. பெண்களால் மட்டுமே நடத்தப்படுகிற ஆசியாவின் மிகப்பெரிய சந்தை இதுதான். அருகருகே இரு கட்டட வளாகங்களில் 3 ஆயிரம் பெண்கள் கடை போட்டிருந்தனர். உணவுப் பொருட்கள், தினசரி பயன்பாட்டுப் பொருட்கள் என அச்சந்தையில் எல்லாமே விற்கப்படுகிறது. உத்வேகம் குன்றாமல் அப்பெண்கள் வியாபாரத்தில் முழு கவனத்தையும் குவித்திருந்தனர். நான் வீடியோ எடுத்தபடியே சென்று கொண்டிருந்தேன். சில குறும்புக்காரப் பெண்கள் கேமிராவுக்கு முன்னால் வந்து முகத்தைக் கோணலாக்கி வேடிக்கை காட்டிச் சென்றனர். பொருள்கள் வாங்கா விட்டாலும் கூட, சந்தையில் என்னென்ன விற்கப்படுகின்றன என்பதை முழுதாகப் பார்க்கவே சராசரியாக இரண்டு மணி நேரம் தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நான் இமா சந்தையைச் சுற்றி வந்தேன். மணிப்பூர் பெண்டிரின் முகங்களையும், அவர்தம் பலநூறு பாவனைகளையும் கடந்து சென்றேன். வடகிழக்கில் மங்கோலியச் சாயல் கொண்ட பெண்களை நினைக்கும்போதே அவர்களது சிரிப்புதான் முதலாக நினைவுக்கு வருகிறது. அவர்களது முகமே சிரிப்பதற்கென்றே செய்ததைப் போல இருக்கும். 

அடுத்த நாள் காலை நான் இம்பாலில் உள்ள மோரே பேருந்து நிலையத்துக்கு ஆட்டோவில் வந்திறங்கியதும் ஒரு ecco வேன் ஓட்டுநர் எனது பேக் பேக்கை வம்படியாக வாங்கிக் கொண்டார். மோரே செல்ல எவ்வளவு என்று விசாரித்தேன். 500 ரூபாய் என்று அவர் சொன்னதும் 108 கி.மீக்கு 500 ரூபாயா? என்று கேட்டேன். இது நிர்ணயிக்கப்பட்ட வாடகை என்றார். நான் ஏறிய பிறகு பின் சீட்டில் 3 பேர் அடங்கிய ஒரு குடும்பம் ஏறியதும் வண்டி புறப்பட்டது. வருகிற வழியில் ஓட்டுநரிடம் பேருந்தில் இம்பால் - மோரேவுக்கு எவ்வளவு எனக்கேட்டேன்.  500 ரூபாய் என்றவர் வேனில் ஆயிரம் ரூபாய் என்றார். உடனே நான் நீங்கள் ஏறும்போது ₹500 தானே சொன்னீர்கள் என்று கேட்கவே விவாதம் முற்றியது. பிறகு அவரே இதை விடுவோம் என்றார். மோரேவில் இறங்கிய பிற்பாடு ₹500 ஜிபே செய்யப்போன போது ₹1000 வேண்டும் என்றார். இது அவர் தவறு என 5 நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேசினேன். அவர் திரும்ப ₹200 ஆவது கொடுக்கும்படி கேட்டார். இதற்கு எப்படி நான் பொறுப்பேற்பது. முடியாது என்றேன். கேட்டுப் பயனில்லை என்பதை உணர்ந்தவர் 500 ரூபாயை வாங்கிக் கொண்டு கிளம்பிப் போனார். 

மோரே ஒரு குறுநகரம்தான். இந்நகரில் இந்திய - மியான்மர் நட்புறவுக்கான கேட் இருக்கிறது. முறைப்படி விண்ணப்பித்தால் அதன் வழியாக மியான்மர் செல்ல முடியுமா என முயற்சித்துப் பார்க்கலாம் என்று தோன்றவே அந்த கேட்டுக்குச் சென்றேன். 2020ம் ஆண்டு மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து மியான்மரின் மாண்டலா நகருக்கு இடையேயான பேருந்துப் போக்குவரத்துக்காக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக இருந்தது. கொரோனா காரணமாக எல்லைகள் மூடப்பட்டதாலும், மியான்மரில் ராணுவ ஆட்சி உருவானதாலும் அத்திட்டம் அப்படியே நின்று விட்டது. மோரேவில்தான் இந்திய - மியான்மர் நாடுகளுக்கிடையேயான சாலை இருக்கிறது. மினார் என்கிற ஆற்றைக் கடந்தால் மியான்மர். அதனைக் கடக்கும் இப்பாலத்தை அயர்ன் கேட் என்கின்றனர். அங்கே ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி காவலுக்கு நின்றிருந்தனர். அவர்களிடம் போய் மியான்மர் செல்வதற்கான நடைமுறை குறித்துக் கேட்டதற்கு இப்போது தரை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. விமானத்தில்தான் போக வேண்டும் என்று சொன்னார்கள். என்னைப் பற்றி விசாரித்தவர்கள் நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன் என்று சொன்னதும் அங்கே இருந்த ஒரு நகலகத்தைக் காண்பித்து அந்தக் கடைக்காரர் தமிழர்தான் போய் அவரிடம் என்ன சந்தேகமாயினும் கேட்கும்படி ராணுவ வீரர்கள் சொன்னார்கள்.

மியான்மர் செல்லும் குறிக்கோளோடுதான் மோரேவுக்கு வந்திருந்தேனே தவிர அங்கு தமிழர்களின் இருப்பு குறித்து நான் அறிந்திருக்கவில்லை. நகலகத்தினுள் சென்று “அண்ணா” என்று குரல் கொடுத்தேன். கடைக்காரர் வந்ததும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மியான்மர் செல்லும் நடைமுறை குறித்துக் கேட்டேன். முன்பு தரை வழியாக மியான்மர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இப்போது மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெறுவதால் அந்த அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார். மியான்மரில் சூழல் நன்றாக இல்லை. ராணுவ ஆட்சியில் உள்நாட்டு மக்களையே சுடுகின்றனர். நமக்கு அவ்வப்போது குண்டுச் சத்தமெல்லாம் கேட்கும் என்று அவர் சொன்னதை அதிர்ச்சி மேலோங்கக் கேட்டேன். மோரேவில் நிறைய தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றவர் நம்மவர்களுக்கான கோவில் ஒன்று இங்கு இருப்பதாகச் சொன்னார். “சாப்பிட்டீங்களா” என்று கேட்டவர், இல்லை என்றதும் நம்முடைய அங்காள பரமேஸ்வரி கோவிலின் கும்பாபிஷேக விழா நடந்து கொண்டிருக்கிறது. வாருங்கள் போய் அன்னதானம் சாப்பிடலாம் என்று என்னைக் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். கோயிலை நெருங்கவே சன்னமாக அந்தப் பாடலைக் கேட்க முடிந்தது ‘தாயே திரிசூலி... அங்காள மாரி... ஓம்காரி மாரியம்மா’ 

உலவித் திரிவோம்...

- கி.ச.திலீபன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow