களைகட்டிய ஆஸ்கர் திருவிழா! விருதுகளும்... சுவாரஸ்யங்களும்...
97வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடந்த சுவாரஸ்யங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. ஹாலிவுட் காமெடி நடிகர் கெனைன் ஓ பிரைன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில், மொத்தம் 23 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. இதில், எமிலியா பெரஸ் திரைப்படம் மொத்தம் 11 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ரசிகர்களும் எமிலியா பெரஸ் திரைப்படம் தான் அதிக விருதுகளை வெல்லும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், ஷான் பேக்கர் இயக்கிய அனோரா திரைப்படம், அதிகபட்சமாக 5 விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
அதன்படி, அனோரா, சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை ஆகிய 5 பிரிவுகளில் விருதுகளை வென்றது. இதனையடுத்து THE BRUTALIST திரைப்படம், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகர் என மொத்தம் 3 விருதுகளை தட்டிச் சென்றது. இப்படத்தில் நடித்த அட்ரியன் பிராடி சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.
2002ம் ஆண்டு வெளியான The Pianist படத்திற்காக Adrian Brody சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றிருந்தார். இந்தநிலையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்று கம்பேக் கொடுத்துள்ளார் Adrian Brody.
அதேபோல், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது THE BRUTALIST படத்திற்காக டேனியல் பிளாம்பர்க்கிற்கு வழங்கப்பட்டது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எமிலா பெரஸ் திரைப்படம், சிறந்த பாடல், துணை நடிகை என இரண்டு பிரிவுகளில் மட்டுமே ஆஸ்கர் விருது வென்றது.
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது, ஏ ரியல் பெயின் திரைப்படத்தில் நடித்த கீரன் கல்கினுக்கு வழங்கப்பட்டது. அதேபோல், சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது எமிலியா பெரஸ் படத்திற்காக ஜோ சல்டானாவுக்கு வழங்கப்பட்டது.
மேலும், சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது, வால்டர் சால்ஸ் இயக்கிய பிரேசில் திரைப்படமான I'M STILL HERE-க்கு கிடைத்தது.
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை, ‘Wicked' படத்திற்காக பால் தேஸ்வெல்க் வென்றார். ஆஸ்கர் விருதை வென்றதும் மேடையில் பேசிய பால் தேஸ்வெல்க், காஸ்ட்யூம் டிசைனுக்காக ஆஸ்கர் விருது வென்ற முதல் கருப்பினர் என நெகிழ்ச்சியாகக் கூறினார். அதேபோல், சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை, CONCLAVE திரைப்படம் வென்றது. இப்படத்தின் திரைக்கதைக்காக பீட்டர் ஸ்ட்ராகனுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
ட்யூன் இரண்டாம் பாகம், சிறந்த விஷுவல் எஃபெக்ட், சிறந்த சவுண்ட் டிசைனிங் என இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியது. DUNE முதல் பாகத்திற்காக ஆஸ்கர் விருது வென்ற RON BARTLETT, DOUG HEMPHILL ஆகியோர், இரண்டாம் பாகத்திற்கும் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை No Other Land என்ற ஆவணப்படம் வென்றது. இது காசா - இஸ்ரேல் போரை பின்னணியாக வைத்து உருவாகியிருந்தது. முக்கியமாக இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்த பிரியங்கா சோப்ரா - குனீத் மோங்காவின் அனுஜா குறும்படம் விருதை தவறவிட்டது; இந்தப் பிரிவில் I'M NOT A ROBOT என்ற குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது. அனுஜா குறும்படம், டெல்லியில் வசித்து வரும் அனுஜா என்ற 9 வயது சிறுமியையும் அவரது சகோதரியையும் பின்னணியாக வைத்து உருவாகியிருந்தது.
இந்நிலையில், சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்ற ஜோ சல்டானா, மேடையில் பேசியபோது உருக்கமாக ஆனந்த கண்ணீர் வடித்தது பார்வையாளர்களை நெகிழச் செய்தது. அதேபோல், கிங் காங் படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் அட்ரியன் பிராடியும் நடிகை ஹாலியும் கட்டியணைத்து லிப் டு லிப் முத்தம் கொடுத்ததும் ரசிகர்களை பரவசப்படுத்தியது. அதேபோல், சிறந்த நடிகைக்கான பிரிவில் இடம்பிடித்த திருநங்கையான கர்லா சொபியாவுக்கு விருது கிடைக்காததும் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. எமிலியா பெரெஸ்’ (Emilia Pérez) படத்தில் நடித்திருந்த கர்லா சொபியா, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த முதல் திருநங்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ‘தி புரூட்டலிஸ்ட்’ படத்திற்காக ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டப்பிங்கில் நடிகர்களின் உச்சரிப்புகள் மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அதனையும் மீறி, சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகர் என 3 விருதுகளை இந்தப் படம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






