GOAT BoxOffice Collection: இரண்டே நாளில் 200 கோடி..? பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் விஜய்யின் கோட்!
விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் முதல் நாளில் 126 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இரண்டாவது நாளில் கோட் படத்தின் வசூல் எப்படி இருக்கிறது என இப்போது பார்க்கலாம்.
சென்னை: கோலிவுட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த கோட் திரைப்படம், இரு தினங்களுக்கு (செப்.5) முன்னர் திரையரங்குகளில் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார். ஏஜிஎஸ் தயாரிப்பில் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தில் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு உள்ளிட்ட மேலும் பலர் நடித்திருந்தனர். அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளதோடு, ஹீரோ – வில்லனாகவும் மிரட்டியுள்ளார் விஜய். இதனால் தளபதியின் ரசிகர்கள் கோட் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு கோட் படம் ரிலீஸானதால், முதல் வாரம் முழுவதும் டிக்கெட் புக்கிங் களை கட்டியது. முக்கியமாக செப் 5ம் தேதியான வியாழன், வெள்ளி (நேற்று), சனி (இன்று), ஞாயிறு (நாளை) ஆகிய தினங்களில் கோட் படத்தின் டிக்கெட்டுகள் முழுமையாக புக் ஆகியுள்ளன. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உட்பட வட இந்திய மாநிலங்களிலும் கோட் வெளியானது. அதேபோல், வெளிநாடுகளிலும் கோட் படத்தை அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் செய்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் இந்த வாரம் தமிழில் கோட் திரைப்படம் மட்டுமே சிங்கிளாக ரிலீஸாகியுள்ளது. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் ஒன்மேன் ஆர்மியாக மாஸ் காட்டி வருகிறார் விஜய். அதன்படி, கோட் திரைப்படம் முதல் நாளில் 126 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கோட் படத்துக்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான லியோ, முதல் நாளில் 142 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்திருந்தது. பாக்ஸ் ஆபிஸில் லியோ படத்தை கோட் ஓவர்டேக் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் நாளில் 126 கோடி வசூலானது.
மேலும் படிக்க - இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்
இந்நிலையில், கோட் படத்தின் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி இரண்டு நாட்கள் முடிவில் கோட் படத்தின் வசூல் 200 கோடியை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 210 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் கோட் படத்தின் வெற்றியை கொண்டாட படக்குழு ரெடியாகி வருகிறதாம். 400 கோடி பட்ஜெட்டில் உருவான கோட், இரண்டே நாட்களில் 200 கோடி வசூலை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் கோட் படத்தின் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து, படக்குழு இதுவரை அபிஸியலாக அறிவிக்கவில்லை.
இந்தாண்டு தமிழில் வெளியான படங்களில் அரண்மனை 4, மகாராஜா, ராயன், தங்கலான் படங்கள் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை கடந்தன. முக்கியமாக ரஜினியின் லால் சலாம், கமல் – ஷங்கர் கூட்டணியில் ரிலீஸான இந்தியன் 2 படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரொம்பவே தடுமாறின. இந்நிலையில், 2024ம் ஆண்டு 200 கோடி வசூலை கடந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது விஜய்யின் கோட். இன்றும் நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால், கோட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?