எஸ்.பி.வேலுமணி இல்ல விழா.. சங்கமித்த பாஜக தலைவர்கள் கூட்டணிக் கணக்கா?
கோவையில் நடைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமன விழாவில் பாஜக தலைவர்கள் ஒருசேர சங்கமித்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமைகிறதா என்று கேள்வி எழும்பியுள்ள நிலையில், அதுகுறித்து விரிவாக இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்..

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இரட்டை தலைமையோடு இயங்கிக் கொண்டிருந்த அதிமுகவில், ஒருகட்டத்திற்கு மேல் ஒற்றைத் தலைமை பிரச்னை வெடித்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு ஒற்றைத் தலைமையாக உருவெடுத்த எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த நிலையில், அண்ணாமலை மீதான அதிருப்தி காரணமாக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அப்போது இருந்தே, எடப்பாடி பழனிசாமி பிரச்சினைக்கு மேல் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்ததால் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்துவந்த மாஜிக்கள், அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்ததாகவும், பாஜக உடன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும், ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுடன் ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என்றும் எடப்பாடிக்கு நெருக்கடிகளை கொடுத்து வருவதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய சூழலில், பாஜகவும் தன் பங்கிற்கு கூட்டணிக்க்காக எடப்பாடியாரிடம் பேச பல காய்களை நகர்த்தியதாகவும். ஆனால், எதுவுமே பலனளிக்காமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மாஜிக்களை வைத்து எடப்பாடியை ஆஃப் செய்ய பாஜக திட்டமிட்டதாகவும், ஆனால் அந்த பிளான் வொர்க் அவுட்டாகாமல் இருப்பதால், தங்கள் அடுத்த வெப்பனை பாஜக மாற்றியதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த புது ஆயுதம், வேறு யாரும் இல்லை முன்னாள் அமைச்சர் எம்.பி.வேலுமணியும், செங்கோட்டையனும் தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
எடப்பாடி பழனிசாமியை கழற்றிவிட்டு அதிமுகவை தன்வசப்படுத்த வேலுமணியும், செங்கோட்டையனும் அவ்வப்போது சில பஞ்சாயத்துகளை கூட்டியதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான், கோவை, ஈச்சனாரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் மகன் விஜய் விகாசுக்கும், தீக்ஷணாவுக்கும் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும், பாஜகவில் இருந்து மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், குஷ்பூ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது அண்ணாமலையிடம் முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் நீண்ட நேரம் உரையாடி நலம் விசாரித்தனர்.
இப்படி அதிமுக மாஜியின் வீட்டு விழாவில் பாஜகவின் மூத்த தலைவர்கள் கலந்துக்கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே எஸ்.பி.வேலுமணியின் ஆக்டிவிடீஸ்களை எடப்பாடி பழனிசாமி கண்காணிப்பு ரேடாரிலேயே வைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருமண விழாவுக்கு பாஜகவினர் போய் சிறப்பித்த இந்த செயல் எடப்பாடியை ஏகத்துக்கும் டென்ஷனாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் கூட்டணி பலமின்றி தவிக்கும் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற பேச்சுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க இபிஎஸ் ஒப்புக்கொள்கிறாரா அல்லது இபிஎஸ்-ஐ ஓரங்கட்டிவிட்டு எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக-பாஜக கூட்டணி அமைகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...
What's Your Reaction?






