பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்... தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Oct 8, 2024 - 17:48
 0
பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்... தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்... உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அப்போது 50 சதவீத இடங்கள் நேரடியாகவும், 48 சதவீத இடங்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும், மீதமிருந்த 2 சதவீத இடங்களை தகுதிப்பெற்ற அமைச்சுப் பணியாளர்கள் மூலமும் நிரப்ப வேண்டும் என, கடந்த 2007ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, 2 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என, பரணி என்பவர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது, 

அப்போது அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடந்த 2014-15ம் ஆண்டு முதல், 2024-25 வரை அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், 130 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளதாகவும், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனவும் அரசுத் தரப்பில் கோரப்பட்டது.

இதனை ஏற்று, வழக்கு விசாரணையை அக்டோபர் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிப் பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு நீண்ட காலமாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு, மனுதாரர்களின் கோரிக்கையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனக் கூறியுள்ளார். மேலும், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow