பையில் மது பாட்டிலுடன் பள்ளி மாணவன்.. கள்ளச்சந்தையில் விற்பனை.. திமுக நிர்வாகி கைது
பாட்டில்களை பையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கும் சிறுவன் வைரல் வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சங்குப்பட்டி கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன், அதே ஊரில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்த சிறுவன் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரையில் ஒரு பையில் மதுபான பாட்டில்கள் சிலவற்றை வைத்துக்கொண்டு, வெள்ளை பனியன் அணிந்து கொண்டு, தலையில் பச்சை துண்டு கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பது போல் வீடியோ இங்கு உள்ள சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இதனையடுத்து யார் அந்த சிறுவன்? மதுபானங்களை யார் அவரிடம் கொடுத்தது? மதுபான பாட்டிலுடன் அமர்ந்திருப்பது எதற்காக என்பது குறித்து பல்வேறு கோணங்களில் கேள்வி எழுந்தது.
இதனையடுத்து செந்துறை போலீசார் விசாரணையில் சிறுவனுடன் அமர்ந்து இருப்பது, அவருடைய உறவினர் என்றும், இவர் பெயர் அறிவானந்தம் என்பது இவர் மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய சிறுவனை பயன்படுத்தியும் தெரியவந்தது.
காலாண்டு விடுமுறைக்காக சிறுவன் அவருடைய மாமா கர்ணன் வீட்டுக்கு ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் மாமா வீட்டில் இல்லாததால், இவருடைய சின்ன மாமா அறிவானந்தம் உடன் சேர்ந்து 3 நாட்கள் மதுபான விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து சென்னையில் இருந்த சென்ற இளைஞர்கள், இதனை விடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியது தெரியவந்துள்ளது.
மேலும் இவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்யக் கொடுத்த, திமுக செந்துறை ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் வீரா.ராஜேந்திரன் மற்றும் அறிவானந்தம் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
What's Your Reaction?