Udhayanidhi: துணை முதலமைச்சர் உதயநிதியின் உதயசூரியன் டி-ஷர்ட்... சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து வருவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு பொதுந்துமா?, டி-சர்ட் கேஷுவல் உடையா? அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்தியகுமார் என்பவர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் டி-ஷர்ட் குறித்து மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அனைத்து அரசு ஊழியர்களும் முறையான ஆடை அணிந்து வர வலியுறுத்தும் வகையில், கடந்த 2019ம் ஆண்டு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். அதன்படி, ஃபார்மல் பேண்ட் ஷர்ட் அல்லது தமிழர் பாரம்பரிய ஆடையான வேட்டி, சட்டை அணிந்து வர வேண்டும் என அரசாணையில் கூறியுள்ளது. இருந்த போதிலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசு ஊழியர்கள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, அரசியல் கட்சிகளின் சின்னத்தை வெளிப்படுத்த தடை உள்ளதாகக் கூறியுள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயல், அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்பதால், அரசு நிகழ்ச்சிகளில் முறையான ஆடைகளை அணிந்து வரும்படி அவருக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டி-சர்ட் அணிவது அரசாணைக்கு எதிரானது என மனுதாரர் தெரிவித்தார்.
இதுகுறித்து விளக்கம் கொடுத்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழக அரசின் அரசாணை அரசு ஊழியர்களுக்கு தான் பொருந்தும் என்றார். இதையடுத்து, அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு பொதுந்துமா? டி-சர்ட் கேஷுவல் உடையா? அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என பதில் மனு தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
What's Your Reaction?