Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு : 296 பேர் பலி.. 4வது நாளாக தொடரும் மீட்பு பணி.. 30 தமிழர்கள் மாயம்?
Tamil Nadu People Missing in Wayanad Landslide : நிலச்சரிவு காரணமாக முண்டக்கை கிராமத்தில் மற்றும் சூரல்மலா கிராமத்தில் பள்ளிகள் அடியோடு மண்ணுக்குள் சரிந்தன. இதில் சிக்கி 27 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 23 மாணவர்கள் மாயம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

Tamil Nadu People Missing in Wayanad Landslide : கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து கொட்டிய கனமழை காரணமாக வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து படுபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குடியிருப்புகள், அங்கு இருந்த பள்ளிகள்,சிறு சிறு வீடுகள் என அனைத்தும் அப்படியே மண்ணுக்குள் புதையுண்டன.
வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மண்ணில் புதையுண்டு தூக்கத்திலேயே உயிரை பறிகொடுத்தனர்.
மேலும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 296 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட கிராமங்களில் இருந்து தோண்டத் தோண்ட சடலங்கள் மீட்கப்பட்டு வருவது அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம் ஆகியோர் இன்று தொடர்ந்து 4வது நாளாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 3,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு இடையேயும் மீட்பு பணி நடந்து வருகிறது.
நிலச்சரிவு காரணமாக முண்டகை-சூரல்மலை இடையேயான பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதால் இருபக்கமும் இடையே 90 அடி நீளமுள்ள, 26 டன் எடையுள்ள இரும்பு பாலத்தை ராணுவ வீரர்கள் அமைத்துள்ளனர். தொடர்ந்து சூரல்மலை கிராமங்களில் மீட்பு பணி தீவிரமடைந்துள்ளது. நிலச்சரிவு காரணமாக முண்டக்கை கிராமத்தில் மற்றும் சூரல்மலா கிராமத்தில் பள்ளிகள் அடியோடு மண்ணுக்குள் சரிந்தன.
இதில் சிக்கி 27 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 23 மாணவர்கள் மாயம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வயநாடு நிலச்சரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த 15 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். மேலும் 80 தமிழர்கள் நிலச்சரிவில் சிக்கி மாயமாகி உள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வயநாடு நிலச்சரிவு தொடர்பான விபரங்களை அறிய தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாட்டைச் சேர்ந்த மீட்புக் குழுவினர், மேப்பாடி, சூரமலை ஆகிய பகுதிகளில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்திட வயநாட்டின் மேப்பாடியில் செயல்படும் முக்கிய நிவாரண முகாமில் உதவி மையம் ஒன்றை தமிழ்நாட்டு மீட்புக் குழுவினர் நிறுவியுள்ளனர்.
ஆகவே கூடுதல் விவரங்கள் மற்றும் தகவல்களை 98943 57299 மற்றும் 93447 23007 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிக்கலாம். உதவி மையத்தை தொடர்பு கொள்பவர் தங்களுடைய பெயர், அவர்களின் இடம், கூற விரும்பும் செய்தி ஆகியவற்றை மேற்கண்ட எண்களில் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப ஆகியோர் அடங்கிய குழுவிடம் கூறலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?






