சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை கஃபே.. விலையை கேட்டால் அசந்து போவீங்க!
சென்னை விமான நிலையத்தில் உணவு பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் வகையில் ‘உடான் யாத்ரீ கஃபே’ திறக்கப்பட்டுள்ளதால் பயணிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் உணவகங்களை திறக்க வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கில் வாடகை செலுத்த வேண்டும். இதனால், விமான நிலையங்களில் உள்ள உணவகங்களில் தண்ணீர் முதல் உணவு வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
முதல் முறையாக விமானங்களில் பயணம் செய்யும் பயணி விலை பட்டியலை பார்த்தால் தலை சுற்றி அந்த இடத்திலேயே விழுந்து விடுவார். அவ்வாறு உணவு பொருட்களின் விலை இருக்கிறது. ஒரு தண்ணீர் பாட்டில் 125 ரூபாய்க்கும், காபி - தேநீர் போன்றவை 150 முதல் 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் சாதாரண இட்லி 250 ரூபாய்க்கும், பிரியாணி 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே விமானத்தில் 100 மில்லி லிட்டர் மட்டுமே தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விமான பயணிகளின் கவலையை போக்கும் விதமாக மத்திய அரசு குறைந்த விலையில் டீ, காபி, உணவு பொருட்களை விற்பனை செய்யும் ‘உடான் யாத்ரீ கஃபே’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது முதலில் கொல்கத்தா விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த கஃபேவை மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்து வைத்தார். மேலும், இந்த திட்டமானது நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இந்த கஃபேவில் தண்ணீர் பாட்டில் 10 ரூபாய்க்கும், டீ 10 ரூபாய்க்கும், காபி 20 ரூபாய்க்கு, சமோசா, வடை போன்ற திண்பண்டங்கள் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த கஃபேவால் விமான பயணிகள் பெரிதும் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையங்களில் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா விவாதங்களை எழுப்பினார். இதையடுத்து இந்த கஃபே தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராகவ் சத்தா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘உடான் யாத்ரீ கஃபே’ முதலில் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. தற்போது சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் மலிவு விலையில் உணவுகள் கிடைக்கும் படி அமைக்கப்படும் நிலையங்களை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
விமான நிலையங்களில் மலிவு விலையில் உணவு பொருட்கள் கிடைக்க வேண்டும் என்று நான் குரல் கொடுத்த போது ஆதரித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?






