’ராகுல் காந்தி நம்பர் ஒன் பயங்கரவாதி’.. மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு.. பாய்ந்தது வழக்கு!
''ராகுல் காந்தியின் கருத்தை காலிஸ்தான் பயங்கரவாதிகள் வரவேற்றுள்ளனர். எப்போது இதுபோன்ற நபர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்தனரோ, அப்போதே அவர் (ராகுல் காந்தி) நம்பர் ஒன் பயங்கரவாதியாக விட்டார்'' என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.
டெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த வாரம் 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு இந்திய வம்சாவளியினர், தொழில்நுட்ப வல்லுநர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்து ராகுல் காந்தி பேசினார். டெக்சாஸ் மற்றும் நியூயார்க்கில் பேசிய ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ், பிரதமர் மோடி மற்றும் பாஜகவை ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசி இருந்தார்.
''நாடாளுன்ற தேர்தல் முடிவு பாஜகவுக்கு பாடத்தை புகட்டியுள்ளது. தேர்தல் முடிவு வெளியான அடுத்த நொடியே பாஜக மற்றும் பிரதமர் மோடி மீதான மக்களின் பயம் போய்விட்டது. இந்திய அரசியலமைப்பு மீதான தாக்குதலை மக்கள் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்'' என்றார். அத்துடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு மக்களை இனம், மொழி, மதம் வாரியாக பிரித்தாள நினைக்கிறது என்றும் பகீரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார்.
மேலும் சீக்கியர்களையும் கடுமையாக தாக்கி பேசிய ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் இந்தியாவில் தன்னை விட மற்ற மொழிகளை, மதங்களை கீழ்த்தரமாகத்தான் பார்க்கிறது. ஆனால் இதை கண்டுகொள்ளமால், இந்தியாவில், ஒரு சீக்கியர், தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவாரா? அல்லது குருத்வாராவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவாரா? என்பதற்கே சண்டை நடக்கிறது. இது சீக்கியர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் என்று கூறியிருந்தார். இது சீக்கியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டின் முன்பு சீக்கியர்கள் போரட்டமும் நடத்தினார்கள்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சை கண்டித்த ரவ்னீத் சிங் பிட்டு, அவரை நம்பர் ஒன் பயங்கரவாதி என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மேலும் பேசிய அவர், ’’ராகுல் காந்தி போன்றவர்கள் முதலில் இஸ்லாமியர்களை பிளவுப்படுத்த நினைத்தனர். ஆனால் அது நடக்காததால் இப்போது சீக்கியர்களை பிளவுப்படுத்த முயற்சிக்கின்றனர். ராகுல் காந்தியின் கருத்தை காலிஸ்தான் பயங்கரவாதிகள் வரவேற்றுள்ளனர். எப்போது இதுபோன்ற நபர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்தனரோ, அப்போதே அவர் (ராகுல் காந்தி) நம்பர் ஒன் பயங்கரவாதியாக விட்டார்’’என்றார்.
ரவ்னீத் சிங் பிட்டுவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மத்திய அமைச்சரின் பேச்சு தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் அவதூறு பரப்புதல், பொய் குற்றச்சாட்டுகளை கூறி வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ரவ்னீத் சிங் பிட்டு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
What's Your Reaction?