ஒருவழியாக மமதாவின் வேண்டுகோளை ஏற்ற மருத்துவர்கள்.. 41 நாட்கள் நடந்த போராட்டம் வாபஸ்!
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை சந்தித்து மமதா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மருத்துவர்கள் அவரிடம் , கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் குமார் கோயலை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; சுகாதார செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட கொடூரர்களால் மாணவி சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த விவகாரத்தில் இதுவரை சஞ்சய் ராய் என்ற ஒரே ஒரு குற்றவாளியை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் படுகொலையை கண்டித்து முதலில் கொல்கத்தாவில் நடந்த போராட்டம், பின்பு பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியது. மேலும் மாணவி படுகொலையை கண்டித்தும், மருத்துவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்கக்கோரியும் மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'மருத்துவ மாணவி படுகொலையில் உண்மை மறைக்கப்படுகிறது. இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்' என்று கொல்கத்தாவில் மருத்துவர்கள் தொடர்ந்து போரட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கொல்கத்தா போலீசார் முடக்கி வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வந்தது. போராடும் மருத்துவர்களிடம் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றார்.
ஆனால் பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். ஒருகட்டத்தில் இந்த போராட்டத்தால் ஆத்திரம் அடைந்த மமதா பானர்ஜி, ’’கொல்கத்தாவில் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடந்து வருகிறது. நீங்கள் தினமும் இரவு சாலையில் போராட்டம் நடத்தி வருவது மக்களுக்கு இடையூறாக உள்ளது. ஆகவே போரட்டத்தை கைவிட்டு துர்கா பூஜையில் கலந்து கொள்ளுங்கள்’’என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை சந்தித்து மமதா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மருத்துவர்கள் அவரிடம் , கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் குமார் கோயலை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; சுகாதார செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினார்கள். இதனால் வேறுவழியின்றி இறங்கி வந்த மமதா பானர்ஜி, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் கவுஸ்தவ் நாயக், சுகாதாரப் பணிகள் இயக்குநர் தேபாஷிஸ் ஹால்டர் ஆகியோரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
ஆனாலும் மாநில சுகாதார செயலாளரை பதவி நீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், சுமார் 41 நாட்களுக்கு மேல் போரட்டம் நடத்திய மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். நாளை முதல் பணிக்கு திரும்ப உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் கொல்கத்தாவில் மருத்துவ சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளன.
What's Your Reaction?






