PM Modi Campaign in Jammu and Kashmir : ஜம்மு-காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளில் 3 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தல் நடந்ததால் ஏராளமான மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 60.21% வாக்குகள் பதிவாகின.
ஜம்மு-காஷ்மீரில் 2ம் கட்ட தேர்தல் செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1ம் தேதியும் நடைபெற உள்ளன. அங்கு அடுத்தக்கட்ட தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி ஸ்ரீநகரில் இன்று பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ''கடந்த 35 ஆண்டுகளாக சுமார் 3,000 நாட்கள் ஜம்மு-காஷ்மீரில் ஊரடங்கு போடப்பட்டு இருந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 5 ஆண்டுகளில் 8 மணி நேரம் கூட அங்கு ஊரடங்கு போடப்படவில்லை.10 ஆண்டுகளுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீர் மக்கள் லால் சௌக் வருவதற்கு அச்சம் கொண்டனர். ஆனால் இப்போது மக்கள் அங்கு தையரியத்துடன் வருகின்றனர்.
இதேபோல் ஸ்ரீநகரில் மார்க்கெட்டுகள் களைகட்டியுள்ளன. ரமலான் மற்றும் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்கள் (தேசிய மாநாட்டு கட்சி, காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் காங்கிரஸ்) மீண்டும் ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் எரிக்கப்பட வேண்டும்; தியேட்டர்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட வேண்டும், வேலைகளில் மோசடி நடக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.
அவர்கள் ஜம்மு-காஷ்மீரை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றதை தவிர வேறெதுவும் செய்யவில்லை. ஆனால் நாங்கள் ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அங்கு தேர்தலை நடத்துகிறோம். ஜம்மு-காஷ்மீர் மக்கள் பாஜகவை ஆட்சியில் அமர வைத்தால், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.10,000 டெபாசிட் செய்யப்படும்.
இதேபோல் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள மூத்த குடிமக்களுக்கு ஆண்டுதோறும் ரு.18,000 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மக்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்படும்.
ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியடைய காஷ்மீர் பண்டிட்கள் மிகப்பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். ஆனால் சுயல்நல அரசியல்வாதிகள் காஷ்மீர் பண்டிட்களை அங்கு இருந்து விரட்டியடித்தனர். சீக்கியர்களையும் ஒடுக்கினார்கள். தேசிய மாநாட்டு கட்சி, காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மக்களை பிளவுபடுத்தினார்கள். ஆனால் பாஜக ஜம்மு-காஷ்மீர் மக்களை ஒன்றிணைக்கிறது. நாங்கள் டெல்லிக்கும், ஜம்மு-காஷ்மீருக்கும் இடையே இணைப்பு பாலம் ஏற்படுத்தினோம்.
முன்னர் ஜம்மு-காஷ்மீரில் சிலர் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் இப்போது அவர்களின் கைகளில் புத்தகங்களும், பேனாக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அந்த 3 கட்சிகளின் சுயநல அரசியலை இளைஞர்கள் புரிந்து கொண்டுள்ளனர். தங்கள் வாக்குகளின் மூலம்தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று அவர்கள் நினைக்கிறனர். சுயநல அரசியல்வாதிகளுக்கு முடிவுகட்ட விரும்புகின்றனர்''என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.