அரசியல்

ஸ்டாலின் வழியில் விஜய்... இந்து மக்களை புண்படுத்த கூடாது.... கரு நாகராஜன் கருத்து!

BJP Karu Nagarajan About Vijay : முதலமைச்சர் ஸ்டாலின் வழியில் சென்று தவெக தலைவர் விஜய் இந்து மக்களின் மனங்களை புண்படுத்தக் கூடாது என மாநில பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் வழியில் விஜய்... இந்து மக்களை புண்படுத்த கூடாது.... கரு நாகராஜன் கருத்து!
இந்து மக்களை புண்படுத்த கூடாது.... கரு நாகராஜன் கருத்து!

BJP Karu Nagarajan About Vijay : நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் தடம் பதிக்கவுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், அடுத்தடுத்து கொடி அறிமுகம், முதல் மாநாடு என படு பிஸியாக வலம் வருகிறார். விஜய்யின் இந்த நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி பெரியாரின் பிறந்தநாளன்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தியது பேசுபொருளானது. இதன் மூலம் அவரது கொள்கை தெரிந்துவிட்டதாக அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். 

இப்படியான சூழலில்தான் தற்போது ஒரு குண்டு போட்டுள்ளார் விஜய். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத அவர், மலையாள பண்டிகையான ஓனத்திற்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இது அரசியல் களத்தில் பூதாகரமாக வெடித்தது. தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் வழியை விஜய் பின்பற்றுவதாக தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் விமர்சனங்களை அடுக்கி வைத்தனர். 

இந்நிலையில் பெரியார் வழியில் உதயநிதி ஸ்டாலினும் மு க ஸ்டாலினும் செல்லட்டும் ஆனால் விஜய் அவ்வாறு செல்வது ஏன்? என மாநில பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

மொடக்குறிச்சி பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி மற்றும் கரு நாகராஜன் ஆகியோர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து இன்று மனு அளித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கரு நாகராஜன், “கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க தமிழக அரசு சார்பில் செய்ய வேண்டிய உதவிகளை செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்துள்ளார்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “ ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் செலவு மிச்சமாகும். அதற்குள் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. விவாதிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. பெரியாரைத் தொட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது” என்றார்.

மேலும் படிக்க: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை - 16 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் மீட்பு 

இதையடுத்து குஜராத்தில் சுங்கச்சாவடிகள் ஒன்று கூட இல்லாத நிலையில் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் அதிக அளவில் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர், “தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று நாங்களும் வலியுறுத்திதான் வருகிறோம். குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் சுங்கச்சாவடிகள் உள்ளன” என்றார். மேலும், “பெரியார் வழியில் உதயநிதி ஸ்டாலினும் மு.க.ஸ்டாலினும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல் போகலாம். ஆனால் விஜய்யும் அவர்கள் வழியில் சென்று பெரும்பான்மை இந்து மக்களின் மனங்களை புண்படுத்தக் கூடாது” என தெரிவித்துள்ளார்.