Child Rescued From Borewell in Jaipur : ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தையைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் தவுசா அருகே உள்ள ஜோத்புரியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜோத்புரியாவில் உள்ள பாண்டூகி என்கிற பகுதியில், நேற்று மாலை 6 மணியளவில் இரண்டரை வயதுப் பெண் குழந்தை விளையாடி கொண்டிருந்தது. நீண்ட நேரம் ஆகியும் குழந்தை திரும்பி வரததால் பெற்றோருக்குச் சந்தேகம் வந்தது. அவர்கள் குழந்தை விளையாண்டு கொண்டிருந்த இடத்துக்கு வந்து பார்த்தபோது அங்கு குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுற்றும் முற்றும் தேடிய பிறகு அருகில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்து விட்டதைக் கண்டுபிடித்தனர். பதறிப்போன பெற்றோர் குழந்தையை மீட்க தங்களால் ஆன முயற்சிகளைச் செய்து போராடினர். எவ்வளவு முயன்றும் அவர்களால் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து குழந்தையை மீட்டெடுக்க முடியவில்லை என்பதால் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து தேசியப் பேரிடர் மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நவீன கருவிகளைக் கொண்டு ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே குழி தோண்டி குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 16 மணி நேரமாக குழந்தையை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக, இன்று காலை 11 மணிக்கு குழந்தையை மிகவும் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அக்குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மீட்புப்படை வீரர்கள் துரிதமாக வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டதாலும், அர்ப்பணிப்புடன் செயல்பட்டதாலும் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. தங்களது பணியைச் சிறப்பாக செய்த மீட்புப் படை வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.