Thirumavalavan Poster Viral : இளைய தளபதி திருமாவளவன்.. அரசு ஊழியர் அரசியல் தலைவரான கதை.. வைரலாகும் போஸ்டர்

Thirumavalavan 1992 Poster Viral : இன்றைக்கு எத்தனையோ அடைமொழிகளால் அழைக்கப்படும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக 1992ஆம் ஆண்டு போராட்டத்தில் பங்கேற்ற போது அவருக்கு இளைய தளபதி பட்டம் சூட்டி போஸ்டர் அடித்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.

Aug 29, 2024 - 13:58
Aug 29, 2024 - 15:37
 0
Thirumavalavan Poster Viral : இளைய தளபதி திருமாவளவன்.. அரசு ஊழியர் அரசியல் தலைவரான கதை.. வைரலாகும் போஸ்டர்
Thirumavalavan 1992 Poster Viral

Thirumavalavan 1992 Poster Viral : அரசு ஊழியராக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தில் பங்கேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக உயர்ந்துள்ளார் தொல். திருமாவளவன். அரசியல் களத்திற்கு வருவதற்கு முன்பே அவருக்கு ஆதரவாளர்கள்  இளைய தளபதி பட்டம் சூட்டியுள்ளனர். 1992ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை போராட்டத்தில் பங்கேற்ற திருமாவளவனுக்கு அச்சடிக்கப்பட்ட போஸ்டரில்  இளைய தளபதி என்று பட்டம் இடம் பெற்றுள்ளது. 

அரியலூர் மாவட்டம், செந்துரை அருகிலுள்ள அங்கனூர் கிராமத்தில் ஆகஸ்ட் 17, 1962-ம் ஆண்டு ராமசாமி, பெரியம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார் திருமாவளவன். இவர் சாதி, மத அடையாளமற்ற தமிழ்ப் பெயரிடலை வலியுறுத்தி, கட்சித் தொண்டர்களோடு சேர்த்து, தன் தந்தையின் பெயரையும் தொல்காப்பியன் என்று தமிழில் மாற்றி தொல்.திருமாவளவன் ஆனார்.


சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடித்தவர், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் பி.யூ.சி., சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை வேதியியல், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை குற்றவியல் பயின்றவர், 1988ஆம் ஆண்டில் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். அதன் பின்னர் அரசு தடயவியல்துறையில் அறிவியல் உதவியாளராக 1999ஆம் ஆண்டு வரை அரசுப் பணியாற்றினார்.

அம்பேத்கரின் மனைவி சவீதா ஆரம்பித்த பாரதீய தலித் பேந்தர் அமைப்பின் தமிழக அமைப்பாளரான மலைச்சாமியுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக, 1982-ல் தன்னை அவ்வமைப்பில் இணைத்துக்கொண்டார்.1983ஆம் ஆண்டில் நடந்த ஈழத்தமிழர்களுக்கான மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு, தனது முதல் அரசியல் நடவடிக்கையைத் தொடங்கினார்.

1986ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழ்க் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் நேரில் சென்று கலந்துகொண்டார்.1989ஆம் ஆண்டு 'பாரதிய தலித் பேந்தர்ஸ்' அமைப்பின் தமிழக அமைப்பாளர் மலைச்சாமி மறைய, 1990ஆம் ஆண்டில் அந்த அமைப்பின் மாநில அமைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் திருமாவளவன். அதன் பின்னர் அமைப்பின் பெயரை `இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்’ என மாற்றியதோடு, புதிய கொடியையும் அறிமுகப்படுத்தினார். மீண்டும் 1991-ம் ஆண்டு அமைப்பின் பெயரை `விடுதலைச் சிறுத்தைகள்’ என மாற்றினார்.

1992ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி சென்னகரம்பட்டி, கன்னிசேரி படுகொலைகளை கண்டித்து அருப்புக்கோட்டையில் ஜான்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் பங்கேற்றார் திருமாவளவன். அப்போது அவரது பெயருக்கு முன்னாள் இளைய தளபதி என்ற அடைமொழியை பயன்படுத்தியுள்ளனர்.தளபதி என்று ஜான்பாண்டியனுக்கு முன்பாக அடைமொழியை பயன்படுத்தியுள்ளனர் தலித் பேந்தர்ஸ் அமைப்பினர்.

தொடக்கத்தில் தேர்தல் அரசியலை விமர்சித்தும், புறக்கணித்தும் வந்த திருமா, 1999ஆம் ஆண்டு ஜி.கே.மூப்பனாரின் உந்துதலின் பெயரில் முதன்முறையாக மக்களவைத் தேர்தலை த.மா.கா கூட்டணியுடன் சேர்ந்து சந்தித்தார். அதற்காகத் தனது தடயவியல்துறை அரசுப் பணியை ராஜினாமா செய்தார். தேர்தல் அரசியலில் களமிறங்கிய திருமாவளவன் எம்எல்ஏ, எம்.பி என மக்கள் சேவகராகவும் மாறியுள்ளார். இன்றைக்கு அவரது பெயருக்கு முன்பாக எழுச்சி நாயகன், மக்களின் முதல்வர் என்றெல்லாம் அவரது ஆதரவாளர்கள் அடைமொழி சூட்டி மகிழ்கின்றனர். 

அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே இவருக்கு இளைய தளபதி பட்டம் சூட்டியுள்ளனர். அதே நேரத்தில் 1990ஆம் ஆண்டு நடிகர் சரவணனுக்கு சேலத்தில் இளைய தளபதி பட்டம் கொடுத்துள்ளனர். திரைப்படங்களில் டைட்டில் கார்டு போடும் போடு இளைய தளபதி என்றே குறிப்பிட்டுள்ளனர். அதன்பிறகு பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்க்கு இளைய தளபதி பட்டம் சூட்டினர் அவரது ரசிகர்கள். இப்போது இளைய தளபதி புரமோசன் ஆகி தளபதியாகி விட்டார். தொல். திருமாவளவன் விசிக தலைவர் ஆகி விட்டார். 

2002ஆம் ஆண்டு திருமாவளவன் பல்வேறு தமிழ் அறிஞர்களை சந்தித்து புழக்கத்தில் இருக்கிற ``சமஸ்கிருத வடமொழிகளுக்குச் சரியான தமிழ்ப் பெயர்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில், சாதி மத அடையாளங்களற்ற தூய தமிழ்பெயர்களை திருமாவின் தந்தை உட்பட ஆயிரக்கணக்கான அவரது தொண்டர்களும் மாற்றி வைத்துக்கொண்டனர். இந்த நிகழ்வு தமிழறிஞர்கள், உணர்வாளர்கள், அரசியல்வாதிகள் என அனைவராலும் பாராட்டப் பெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow