ஆம்ஸ்ட்ராங்கையும் காப்பாற்றவில்லை.. திருவேங்கடத்தையும் காப்பாற்றவில்லை... சீமான் கண்டனம்
விசாரணை சிறைவாசி திருவேங்கடம் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை, உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விசாரணை சிறைவாசி திருவேங்கடம் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை, உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில்,இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை என மொத்தம் 11 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்தாண்டு பட்டினப்பாக்கத்தில் நடந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ததாக 11 நபர்கள் வாக்குமூலம் அளித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இவர்களை சிறையில் அடைத்த நிலையில், கடந்த பதினோராம் தேதி ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தனி இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக கருதப்படும் திருவேங்கடம் ஆயுதங்களை மாதவரம் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக கொடுத்த தகவலின் பெயரில், கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் தனிப்படை ஆய்வாளர் முகமது புகாரி தலைமையிலான போலீசார் அவரை மாதவரம் பகுதிக்கு கொண்டு செல்லும்போது திடீரென ஆடுதொட்டி அருகே திருவேங்கடம் போலீசாருக்கு தண்ணி காட்டி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
உடனடியாக போலீசார் திருவேங்கடத்தை தீவிரமாக தேடிய போது புகழ் பகுதியில் உள்ள வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியில் அமைந்துள்ள காலி இடத்தில் தகர கொட்டாயில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. காலை 7 மணியளவில் அவரை சுற்றி வளைத்த போது, திடீரென அந்த தகரக் கொட்டாயில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து, திருவேங்கடம் ஆய்வாளர் முகமது புகாரியை நோக்கி சுட்டுள்ளார். இதனால், தற்காப்புக்காக ஆய்வாளர் முகமது புகாரி துப்பாக்கியால் திருவேங்கடத்தின் வலது பக்க வயிறு மற்றும் இடது பக்க மார்பில் இரண்டு முறை சுட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவேங்கடம் என்கவுன்ட்டர் குறித்து கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் அன்புத்தம்பி ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை சிறைவாசி திருவேங்கடம், சென்னை - மாதவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த விசாரணை சிறைவாசி சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி? முக்கியமான அரசியல் தலைவரின் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளியின் பாதுகாப்பில் காவல்துறை அலட்சியமாக இருந்தது எப்படி? இந்திய அளவிலான கட்சியின் மாநிலத்தலைவரின் படுகொலையைத்தான் தடுக்க முடியவில்லை. குறைந்தப்பட்சம் அதில் சரணடைந்த விசாரணை சிறைவாசியையும் காப்பற்ற முடியவில்லை என்பது வெட்கக்கேடானது. வன்மையான கண்டனத்துக்குரிய இந்நிகழ்வு திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்குத் திறனற்றதாகியுள்ளது என்பதையும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு மோசமாகச் சீரழிந்துள்ளது என்பதையுமே காட்டுகிறது.
உண்மையை மூடி மறைப்பதற்காக காவல்துறையினரே போலியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது பல வழக்குகளில் மெய்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தம்பி ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற சந்தேகம் தற்போது விசாரணை சிறைவாசி திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அதிகமாகிறது.
தம்பி ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் இரண்டு திமுக நிர்வாகிகள் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் நிலையில், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் உட்பட அனைவரும் வலியுறுத்தி வந்த நிலையில், விசாரணை தொடங்கும் முன்பே நடத்தப்பட்டுள்ள இத்துப்பாக்கிச்சூடு உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதற்காக திமுக அரசு நடத்திய நாடகம்தான் இப்படுகொலையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
என்கவுண்டர் எனும் பெயரில், விசாரணை சிறைவாசிகளைக் கொலைசெய்வதை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. குற்றவாளிகள் மீதான மக்களின் கோபத்தையும், ஆளும் ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியையும் மட்டுப்படுத்த வேண்டுமானால் என்கவுண்டர்கள் உதவலாமே ஒழிய, அது ஒருநாளும் குற்றத்துக்கான முழுமையானத் தீர்வில்லை.
ஆகவே, மனித உரிமைகள் ஆணையமும், மாட்சிமை பொருந்திய நீதிமன்றமும் விசாரணை சிறைவாசி திருவேங்கடம் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டுமெனவும், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் அன்புத்தம்பி ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளார்.
What's Your Reaction?