கெடு விதித்த அண்ணாமலை..? மண்டை காயும் மா.செக்கள்..! கலகலத்துப் போன கமலாலயம்..!

பல்வேறு இன்னல்களுக்கு பிறகு உட்கட்சித் தேர்தலை நடத்தி முடித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாவட்டச் செயலாளர்களுக்கு அதிரடியாக கெடு ஒன்றை விதித்துள்ளதால் கமலாலயமே கலகலத்துப் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி அண்ணாமலை விதித்த கெடு என்ன? மா.செக்கள் இதனை சமாளிப்பார்களா? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.

Feb 12, 2025 - 21:30
Feb 13, 2025 - 16:35
 0
கெடு விதித்த அண்ணாமலை..? மண்டை காயும் மா.செக்கள்..! கலகலத்துப் போன கமலாலயம்..!
கெடு விதித்த அண்ணாமலை..? மண்டை காயும் மா.செக்கள்..! கலகலத்துப் போன கமலாலயம்..!

பாஜகவில் உட்கட்சித் தேர்தலை நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்ட நிலையில், மாவட்டச் செயலாளர்கள் நியமிப்பதிலும் குளறுபடிகள், குழப்பங்கள், மோதல்கள் என பல சிக்கல்களை தலைமை சந்தித்து வந்ததாக கமலாலய வட்டாரங்கள் தெரிவித்தன. 

பாஜகவை பொறுத்தவரை 234 சட்டமன்றத் தொகுதிகள் 67 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மா.செ நியமனம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்தவகையில், இம்முறை மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதற்கு மாநில தலைமை திணறி வந்ததாகக் கூறப்பட்டது. காரணம், மாவட்டச் செயலாளரை தேர்வு செய்ய மண்டல தலைவர்கள் வாக்களிக்க வேண்டும், ஆனால் பல மாவட்டங்களில் மண்டல தலைவர் நியமனத்திற்குக்கூட நிர்வாகிகள் இல்லை என்று விவரம் அறிந்தவர்கள் கூறினர். 

இந்த நிலையில், எப்படியோ பல்வேறு சிக்கல்களை தாண்டி, மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பல மாவட்டங்களில் செயலாளர்கள் நியமனத்தால் நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளதாகவும், சீனியர்களின் ஆதரவாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டு வருகின்றன. காலங்காலமாக கட்சிக்கு உழைத்தால், லாபிகளில் பதவி கொடுப்பது தங்கள் உழைப்பை அவமதிப்பதற்கு சமம் என்று நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. அதோடு, விண்ணப்பிக்காமலே சிலர் மாவட்டச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.  

மறுபக்கம், கோட்டா அடிப்படையில் மாவட்டங்களை பிரித்துக் கொடுத்தாகிவிட்டது, இனி நான் சொல்வதைத்தான் அனைவரும் கேட்கவேண்டும் என்று ஸ்டிரிக்ட் உத்தரவு போட்டுள்ளார் அண்ணாமலை என்று கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மாவட்டத் தலைவர் பதவியை அண்ணாமலை கொடுத்திருந்தாலும் அவர்களுக்கு ஆறு மாதங்கள் கெடு விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, இவர்கள் செய்யும் பணியை வைத்துதான், அண்ணாமலையை டெல்லி தலைமை மதிக்கும் என்பதாலும், அதனடிப்படையில் அண்ணாமலையே மீண்டும் மாநில தலைமை பொறுப்புக்கு வர வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில் பாஜகவை தயார் செய்ய வேண்டி உள்ளதால், கட்சியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு அண்ணாமலை தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றால் மாவட்டங்களில் பாஜகவை வளர்க்க வேண்டும். எனவே, புதிதாக தேர்வாகியுள்ள மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் கட்சியை வளர்க்க திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும், இதில் சிறப்பாக செயல்படுவோருக்கு சில சலுகைகள் வழங்கப்படும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதோடு, சிறப்பாக செயல்படுபவர்கள் மட்டுமே பதவியில் நீடிப்பார்கள் என்றும், செயல்பாடு சரியில்லாதவர்கள் மாற்றப்படுவது உறுதி என அண்ணாமலை சொல்லிவிட்டு, ஆறு மாதம் மட்டுமே கெடு என்று ஸ்டிரிக்ட்டாக சொல்லிவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் புதிதாக தேந்தெடுக்கப்பட்ட மாவட்டத் தலைவர்கள் மண்டைக் காய்ந்து போயுள்ளதாக கமலாலய வட்டாரங்கள் கூறுகின்றன. 

அண்ணாமலை  கொடுத்துள்ள காலக் கெடுவிற்குள் மாவட்டத் தலைவர்கள் கட்சியை வளர்ப்பார்களா? அல்லது பாஜகவிற்குள் மாவட்டத் தலைவர்கள் மாற்றம் நிகழுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow