ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு... கொதிக்கும் தமிழ்நாட்டு மக்கள்.. ஆர்.பி. உதயகுமார் பேச்சு!

வளர்ச்சிக்கும் நிதி இல்லை, வறட்சிக்கும் நிதி இல்லை. மத்திய அரசு வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

Sep 2, 2024 - 23:59
Sep 3, 2024 - 15:48
 0
ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு... கொதிக்கும் தமிழ்நாட்டு மக்கள்.. ஆர்.பி. உதயகுமார் பேச்சு!
கொதிக்கும் தமிழ்நாட்டு மக்கள்.. ஆர்.பி. உதயகுமார் பேச்சு

மதுரையில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “மத்திய அரசும், மாநில அரசும் மக்கள் மீது அக்கறை இல்லாமல், மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை கூட செய்ய தவறி இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாகதான் இன்று பள்ளி கல்வித்துறைக்கு நிதி வழங்குவதில் அலட்சியம், அரசியல் கால்ப்புணர்ச்சி என்று தமிழகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மத்திய அரசை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டார், மாநில அரசு அழுத்தம் கொடுத்து அந்த நிதியை பெற வேண்டும் என வலியுறுத்தியும் கூட இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடர்ந்து புலம்பி வருகிறாரே தவிற இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வழியை காணவில்லை. முதல் தவணையாக 523 கோடி ஜூன் மாதமே ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால் தற்போது செப்டம்பர் 2ம் தேதி, இதுவரை அந்த நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. புதிய தேசிய கல்விக்கொள்கையின் அமலாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், பிஎம்ஜி பள்ளிகள் திட்டத்தில் இணைந்தால் தான் எஸ்எஸ்ஏ திட்டத்திற்கு நிதி வழங்க முடியும் என்று தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு நிபந்தனை விதிப்பதாக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடர்ந்து பேசி வருகிறார். இப்படி இரண்டு பேரும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு குற்றம் சாட்டுவதால் என்ன பலன் ஏற்பட போகிறது.

இந்த நிலையில் தான் பிஎம்ஜி திட்டத்தில் இணைந்தற்கான ஒப்பந்ததில் கையெழுத்திடுவதாக ஏற்கனவே தமிழ்நாடு அரசு சொல்லியுள்ளனர் என மத்திய கல்வித்துறை அமைச்சகம் சொல்கிறது. அப்படியானால் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் நீலிக் கண்ணீர் யாரை ஏமாற்றுவதற்காக என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாக இருக்கிறது. மத்திய அரசும் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கிறது, மாநில அரசும் அந்த நிதியை பெற்றுத் தராமல் வஞ்சிப்பது நியாயம் தானா என தமிழ்நாடு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு திமுக அரசு வெறும் முந்திரி பக்கோடாவை சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது கடமையை ஆற்றுகின்றார்களா? இல்லையா? என தமிழ்நாட்டு மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “கல்விக்கும் நிதி இல்லை, வெள்ள நிவாரணத்திற்கும் நிதி இல்லை, மெட்ரோ திட்டத்திற்கும் நிதி இல்லை, பட்ஜெட்டிலும் நிதி இல்லை தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள திமுக என்ன செய்து கொண்டிருக்கிறது? பாஜக ஆளும் மாநிலங்களில் நிதியை வாரி வழங்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டை மதிக்கவே இல்லை, இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு இருக்கிறதா என தமிழ்நாட்டு மக்கள் ஐய்யம் கொள்கிற வகையில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பது வேதனையிலும் வேதனையாக இருக்கிறது. ஏற்கனவே மாநில அரசின் நிர்வாகத்தில் நிலைகுலைந்து போய் இருக்கிற மக்கள் மீது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல இன்று மாநில அரசு ஒரு புறம் மக்களை துன்புறுத்தி வருகிறது, மத்திய அரசும் ஒரு புறத்திலே துன்புறுத்தி வருகிறது. 

மேலும் படிக்க: ‘தேவா’வாகக் களமிறங்கும் ரஜினிகாந்த்...... ரசிகர்களை மெர்சலாக்கிய ‘கூலி’ ஸ்டில்!

தமிழ்நாட்டில் ஒரு ரூபாய் வரி கட்டினால் 29 பைசா தான் கொடுக்கிறார்கள். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகமாக 3 ரூபாய் கொடுக்கிறார்கள். ஆகவே வந்தே பாரத் என்று விழா எடுப்பது இதையெல்லாம் திசை திருப்பும், மடை மாற்றும் நிகழ்வாக இருக்கிறது. ஆகவே வளர்ச்சி நிதி என்றாலும், வறட்சி நிதி என்றாலும் தமிழ்நாடு என்று சொன்னால் மத்திய அரசு ஓர வஞ்சனையாக ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என பார்க்கிறது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நிதி இல்லை, நீதிக்கு புறம்பாக, மக்களாட்சிக்கு புறம்பாக, மக்கள் விரோத நடவடிக்கையாக மத்திய அரசு நடந்துகொள்வதாக தமிழ்நாட்டு மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow