தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, தனது புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார் விஜய். ஆறு மாதங்களுக்குப் பிறகு கடந்த 22ஆம் தேதியன்று தமிழக வெற்றிக்கொடியினை அறிமுகம் செய்து வைத்தார். மஞ்சள், சிவப்பு நிற கொடியில் யானைகள், வாகைப்பூ இடம் பெற்றுள்ளது.கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே சர்ச்சை உருவாகியுள்ளது. அதற்குக் காரணம் கொடியில் இருந்த யானைதான்.
கட்சியின் முதல் மாநாட்டை வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தார். மாநாட்டுக்கான இடத்தைத் தேர்வு செய்யும் பொறுப்பு, கட்சியின் பொதுச்செயலாளரான பாண்டிச்சேரி ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முதலில், ஈரோடு மாவட்டத்தில்தான் மாநாடு நடத்துவதற்கு இடம் பார்க்கப்பட்டது. 'பெரியார் பிறந்த மண்' என்கிற அடிப்படையில், கட்சியின் தொடக்க விழாவை அங்கிருந்து தொடங்கவும் ஆலோசிக்கப்பட்டது.
தென்மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு போதிய போக்குவரத்து வசதிகள் கிடைக்காது. தவிர, நாம் எதிர்பார்க்கும் அளவில் ஈரோட்டில் இடமும் கிடைக்கவில்லை எனக் கட்சியிலுள்ள சீனியர் நிர்வாகிகள் ஆலோசனை சொல்லவும், மதுரையிலும் திருச்சியிலும் இடம் பார்க்கச் சொல்லியிருக்கிறார் விஜய். அதற்காக கடந்த ஒரு மாதமாக திருச்சி, மதுரையில் சுற்றிவந்தார் பாண்டிச்சேரி ஆனந்த். திருச்சி பொன்மலையிலுள்ள ரயில்வே மைதானத்தை வாடகைக்கு எடுக்கவும் பேசப்பட்டது. தொண்டர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாது என்பதால் விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் த.வெ.கவின் முதல் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி மாநாடுக்கான தேதியாகக் குறிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க: பாய்ச்சலுக்கு தயாராகும் பாஜக.... தமிழ்நாடு முழுவதும் நாளை மாபெரும் உறுப்பினர் சேர்க்கை!
இந்நிலையில் தவெக-வின் முதல் மாநாட்டின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநாட்டை முன்னிட்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 4 பொறுப்பாளர்கள் நியமிக்க உள்ளதாகவும் கட்சியின் கொள்கைகள் குறித்து விஜய் பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.