14 லட்சம் மக்களின் உணவுக்காக யானை உள்பட 723 வன விலங்குகளை கொல்ல அரசு முடிவு!
நாட்டின் நிலப்பரப்பில் பெரும் பகுதி வனங்களை கொண்ட நமீபியாவில் பெரிய அளவில் எந்த தொழில் வளர்ச்சியும் இல்லை. சுரங்கத் தொழில் பரவலாக நடைபெறும் நிலையில், அதில் பெரும்பாலானவை அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல், கொள்ளையர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.
விண்ட்ஹோக்: தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்று நமீபியா. வறட்சிக்கு பெயர் போன நமீபியாவில் கடுமையான பசி, பட்டினி நிலவி வருகிறது. சுமார் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பசியால் வாடி வருகின்றனர். அதாவது கடந்த அரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவி வருவதால் ஒருவேளை உணவுக்கு கூட வழியின்றி மக்கள் வாடி வருகின்றனர்.
நாட்டின் நிலப்பரப்பில் பெரும் பகுதி வனங்களை கொண்ட நமீபியாவில் பெரிய அளவில் எந்த தொழில் வளர்ச்சியும் இல்லை. சுரங்கத் தொழில் பரவலாக நடைபெறும் நிலையில், அதில் பெரும்பாலானவை அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல், கொள்ளையர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. நாடு முழுவதும் நிலங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளதால், விவசாயத்துக்கும் வழியில்லை. வேறு எந்த தொழில்களும் இல்லாததால் அரசுக்கும் வருமானம் இல்லை; மக்களுக்கும் வாழ்வாதாரத்துக்கு வழியில்லை.
இதுவே பல லட்சக்கணக்கான மக்களை பட்டினியில் தள்ள முக்கிய காரணமாகும். வருமானம் இல்லாததால் மக்களின் பசியை போக்குவது எப்படி என்பது அரசுக்கும் தெரியவில்லை. இந்நிலையில், மக்களின் உணவுக்காக 723 வன விலங்குகளை கொல்ல நமீபியா அரசு முடிவு செய்துள்ளது. அதாவது 30 நீர் யானைகள், 60 எருமை மாடுகள், 150 மான்கள், 100 நீல காட்டெருமை, 300 வரிக்குதிரைகள், 83 யானைகள் ஆகிய வனவிலங்குகளை கொன்று மக்களுக்கு உணவு அளிக்க நமீபியா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே வேளையில் இதில் 150 வன விலங்குகள் ஏற்கெனவே கொல்லப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் சுமார் 63 டன் இறைச்சி (63,000 கிலோ இறைச்சி) கிடைத்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. ''நமீபியா மக்களின் நலனுக்காக நாட்டின் இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எங்களது அரசியலமைப்பு சட்டத்திலேயே உள்ளது'' என நமீபியாவின் சுற்றுச்சூழல் துறை வனம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நமீபியா அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ''நமீபியாவின் வறட்சியை போக்கவும், மக்களின் பட்டினியை போக்கவும் நமீபியா அரசும், ஐநாவும் இணைந்து வேறு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் உணவுக்காக வன விலங்குகளை வேட்டையாடினால் சுற்றுச்சூழல் சமநிலை மாறி விடும்'' என்று அவர்கள் கூறியுள்ளனர். நமீபியாவை போன்று அங்கோலா, ஷாம்பியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?