திருவேங்கடம் என்கவுண்டர் நடந்தது எப்படி?.. காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கம்..

திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதின் பின்னணியில் திமுக உள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

Jul 14, 2024 - 22:23
 0
திருவேங்கடம் என்கவுண்டர் நடந்தது எப்படி?.. காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கம்..
திருவேங்கடம் என்கவுண்டர் நடந்தது எப்படி என சென்னை காவல்துறை விளக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டது எப்படி என்று சென்னை காவல்துறை அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த 05.07.2024 அன்று, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது) கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். இவர்  கொலை வழக்கு தவிர இரண்டு கொலை வழக்குகள் மற்றும் வழிப்பறி, கொடுங்காய வழக்கு ஆகிய ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். 

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று 14.07.2024 தேதி அதிகாலை, போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடத்தை  வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். 

அவ்வாறு அழைத்து செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தியபோது, பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

உடனடியாக பாதுகாவலாக சென்ற காவலர்கள் அவரை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை. புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தபோது, எதிரி தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார். 

உடனடியாக காவல் ஆய்வாளர்  திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த திருவேங்கடம்  உடனடியாக மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக புழல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நீதிமன்ற நடுவர் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதின் பின்னணியில் திமுக உள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், “கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ”தம்பி ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் இரண்டு திமுக நிர்வாகிகள் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் நிலையில், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் உட்பட அனைவரும் வலியுறுத்தி வந்த நிலையில், விசாரணை தொடங்கும் முன்பே நடத்தப்பட்டுள்ள இத்துப்பாக்கிச்சூடு உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதற்காக திமுக அரசு நடத்திய நாடகம்தான் இப்படுகொலையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது” என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow