Udhayanidhi: ஸ்டாலின் வழியில் துணை முதலமைச்சர் பதவி... அசுர வேகத்தில் உதயநிதி... அடுத்து என்ன..?

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக தற்போது பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். தனது தந்தை ஸ்டாலின் ரூட்டில் திமுக இளைஞரணி செயலாளராக அரசியலில் களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின், இப்போது துணை முதலமைச்சர் பொறுப்புக்கு வந்துவிட்டார். ஸ்டாலின் வழியில் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ள உதயநிதியின் அரசியல் பயணத்தை தற்போது பார்க்கலாம்.

Sep 29, 2024 - 16:04
 0
Udhayanidhi: ஸ்டாலின் வழியில் துணை முதலமைச்சர் பதவி... அசுர வேகத்தில் உதயநிதி... அடுத்து என்ன..?
உதயநிதி ஸ்டாலின் பயோ

சென்னை: நீண்ட நெடிய வரலாறு கொண்ட திராவிட முன்னேற்ற கழகம் 75 ஆண்டுகளை கடந்து தற்போது பவள விழா கொண்டாடியது. இதற்கு மத்தியில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் உதயநிதி ஸ்டாலின். தாத்தா கலைஞர் கருணாநிதி 5 முறை முதலமைச்சர், அப்பா மு.க ஸ்டாலின் தற்போதைய முதலமைச்சர். அதோடு பொன்விழா கண்ட அரசியல் கட்சியின் தலைவர். இதுபோல பெரும் அரசியல் பின்னணியைக் கொண்ட உதயநிதி ஸ்டாலின், ஆரம்ப கட்டத்தில் அரசியலில் கவனம் செலுத்தாமல், சினிமா பக்கம் ஆர்வம் செலுத்தினார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் என்ற பேனரில் பல படங்களை தயாரித்து வந்தார். 

திரைக்குப் பின்னால் பிசியாக இருந்த உதயநிதி, 2012ல் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவரிடம், செல்லும் இடமெல்லாம் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்வி பின் தொடர்ந்து கொண்டே இருந்தது. அதற்கு, இல்லை என்றே பதில் சொல்லிவந்த உதயநிதி, அவ்வப்போது திமுக மேடைகளில் மட்டும் தென்படத் தொடங்கினார். தொடர்ந்து, 2018ல் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்த அவர். 2019ல் திமுக நடத்திய கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று அதிரடி காட்டினார்.

2019ல் திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 40. இதேபோல் தான் மு.க ஸ்டாலினும் திமுக இளைஞரணிச் செயலாளராக தனது 30வது வயதில் பெறுப்பேற்றார். தந்தை ஸ்டாலின் வழியில் உதயநிதிக்கு கொடுக்கப்பட்ட முதல் பொறுப்பே திமுக இளைஞரணிச் செயலாளர் தான். 2019 நாடாளுமன்ற தேர்தலில் உதயநிதி மேற்கொண்ட பிரசார யுக்தி, தமிழகத்தில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று இயல்பான நடையில் பேசி, மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார். 

முக்கியமாக பிரசாரத்தின்போது அவர் கையில் எடுத்து செங்கல், தமிழகத்தில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்தது. பின்னர் 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றார் உதயநிதி. அப்போது உதயநிதியின் வயது 41. இதேபோல் மு.க ஸ்டாலின் 1989ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்றம் சென்றார் ஸ்டாலின். அப்போது ஸ்டாலினின் வயது 36. இதனிடையே திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைந்த முதல் அமைச்சரவையில் உதயநிதி இடம்பெறவில்லை. பின்னர் தொண்டர்கள், நிர்வாகிகளின் தொடர் கோரிக்கையால், 2022 டிசம்பரில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றார். 

அதேநேரம் சினிமாவில் இருந்து விலக முடிவு செய்த உதயநிதி, நெஞ்சுக்கு நீதி, மாமன்னன் என இரண்டு முக்கியமான படங்களில் நடித்தார். தனது அரசியல் பயணத்துக்கு உதவியாக இருக்கும் வகையில் தான் நெஞ்சுக்கு நீதி, மாமன்னன் படங்களில் உதயநிதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி, செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள், ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள், ஃபார்முலா 4 கார் பந்தயம் என பல்வேறு விளையாட்டு போட்டிகளை சென்னையில் வெற்றிகரமாக நடத்தி, விளையாட்டு துறையில் தமிழகத்தை முன்னிலைப்படுத்தினார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முட்டையை கையில் எடுத்து, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ததில் பெரும் பங்கு வகித்தார். 

சமீப காலமாகவே அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொண்டர்கள் தொடங்கி அமைச்சர்கள் வரை எழுப்பத் தொடங்கினர். இதுகுறித்து முதலமைச்சரிடம் கேட்டபோது, வலுத்துவிட்டது ஆனால் பழுக்கவில்லை என மழுப்பலாகவே பதிலளித்தார். இதையடுத்து, அமெரிக்க பயணம் சென்றபோது, மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பயணம் முடிந்து நாடு திரும்பியதும், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து அதே கேள்வி மீண்டும் முன்வைக்கப்பட்டது, அதற்கு, அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஆனால் ஏமாற்றம் இருக்காது என பதிலளித்தார். 

அதன் தொடர்ச்சியாக, உதயநிதிக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி அறிவிக்கப்படும் என தினமும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், திமுக பவள விழா காஞ்சிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த கையோடு, துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். அவரது தேர்தல் பிரசார பயணங்கள் மட்டும் சூறாவளி அல்ல, அவரது ஒட்டுமொத்த அரசியல் பயணமே அப்படித்தான் இருக்கிறது. 2006ம் ஆண்டு தனது 53வது வயதில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவியேற்ற ஸ்டாலின், 2009ல் துணை முதலமைச்சரானார். அதேபோல் 2022ம் ஆண்டு அமைச்சராக பதவியேற்ற உதயநிதி, தற்போது துணை முதலமைச்சர் ஆகியுள்ளார். மு.க ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்கும் போது அவருக்கு 56 வயது. ஆனால் உதயநிதியோ தனது 46வது வயதிலேயே துணை முதலமைச்சராக பதவிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.     

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow