துணை முதலமைச்சராகும் உதயநிதி மீது விமர்சனம்... “பாஜக ஒரு செல்லாக் காசு...” சேகர்பாபு பதிலடி!

தமிழகத்தில் தகுதியில்லாத இயக்கம் என்பதனால் தான், மக்கள் பாஜகவிற்கு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை பரிசாக அளித்தனர்; தமிழக மக்களிடம் செல்லாக் காசாகிப்போன பாஜகவின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்க விரும்பவில்லை என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

Sep 29, 2024 - 17:14
 0
துணை முதலமைச்சராகும் உதயநிதி மீது விமர்சனம்...  “பாஜக ஒரு செல்லாக் காசு...” சேகர்பாபு பதிலடி!
பாஜகவுக்கு பதிலடி கொடுத்த சேகர் பாபு

சென்னை: தமிழக அரசியலில் நீண்ட நாட்கள் பரபரப்பாக இருந்த செய்தி, உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படுகிறதா என்பது தான். இந்த கேள்விகளுக்கு நேற்றிரவு விடை கிடைத்துள்ளதோடு, இன்னும் சற்று நேரத்தில் உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார். அதேபோல், சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜிக்கும் மீண்டும் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமினுக்காக தான் உதயநிதியின் துணை முதலமைச்சர் அறிவிப்பு தாமதமானதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், துணை முதலமைச்சராகும் உதயநிதிக்கு அரசியல் பிரபலங்களும் திரை நட்சத்திரங்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் இதுகுறித்து கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். ”தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர் என்றால், இங்கு ஜனநாயகம் எங்கே இருக்கிறது. இது ஜனநாயக வழிமுறை என்று சொல்ல முடியாது, முடியாட்சியை நோக்கி திமுக சென்றுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசியலில் இது தவறான முன்னுதாரணம்” என விமர்சித்திருந்தார். இதேபோல், பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளது விமர்சித்திருந்தனர்.    

இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் சேகர் பாபு, துணை முதலமைச்சராவதற்கு அனைத்து தகுதியும் பொருந்தியவர் உதயநிதி ஸ்டாலின் எனவும், அடுத்த கால் நூற்றாண்டு காலம் திமுகவையும், தமிழக மக்களின் நலனையும் தனது தோளில் அவர் சுமக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சென்னை முன்னாள் மேயர் சிவராஜின் 133-வது பிறந்த நாளையொட்டி தண்டையார்பேட்டை தங்கசாலை பகுதியில் அவரது உருவ சிலைக்கு திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சிவராஜின் திருவுருவ படத்திற்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சரின் பணிகளுக்கு ஏற்கனவே தோள் கொடுத்து பணியாற்றியவர் உதயநிதி ஸ்டாலின். களத்தில் மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு மக்கள் பணியாற்றியதன் வாயிலாக, கடந்த 7 ஆண்டுகளில் திமுகவின் முன்னேற்றத்திற்கும் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கும் அரும்பாடுபட்டவர் உதயநிதி ஸ்டாலின். மக்களின் நலன் எது என்பதை முழுமையாக அறிந்தவர் உதயநிதி. எனவே முதலமைச்சரின் தலைமையில் அமைந்துள்ள திமுகவின் புதிய திட்டங்களை உருவாக்கி, மக்கள் நலன் பெறும் வகையில் பணி சிறக்கும் வகையில் உதயநிதியின் செயல்பாடு இருக்கும் என திமுக உறுப்பினர்களூம் பொதுமக்களும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். 

பாஜக தமிழகத்தில் தகுதியில்லாத இயக்கம். அதனால்தான், மக்கள் பாஜகவிற்கு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை பரிசாக அளித்துள்ளனர். அனைத்து தகுதியும் பொருந்திய உதயநிதி ஸ்டாலின், அடுத்த கால் நூற்றாண்டு காலம் திமுகவையும், தமிழக மக்களின் நலனையும் தனது தோளில் சுமக்க உள்ளார். தமிழக மக்களிடம் செல்லாக்காசாகிவிட்ட பாஜகவின் கூற்றுக்கு செவிசாய்க்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow