மொழிப்போர் தியாகிகளை கையில் எடுத்த விஜய்.. திமுக, சீமானை ஓவர்டேக் செய்வாரா?..

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் கட்சிப் பாடலை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று வெளியிடுகிறார்.

Aug 22, 2024 - 09:43
Aug 22, 2024 - 11:55
 0
மொழிப்போர் தியாகிகளை கையில் எடுத்த விஜய்.. திமுக, சீமானை ஓவர்டேக் செய்வாரா?..

இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும் என்று குறிப்பிடுள்ளார். தமிழ்நாட்டின்‌ நலனுக்காக உழைத்து, நம்‌ மாநிலத்தின்‌ அடையாளமாக நம் கொடி மாறப்‌ போகுது என்றும் விஜய் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தவெக கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய பின்னர் ஏற்கப்படவுள்ள உறுதிமொழி வெளியாகியுள்ளது. அந்த உறுதிமொழியில், ”நமது நாட்டின் விடுதலைக்காகவும். நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த உறுதிமொழியில் முக்கிய அம்சமாக, மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் பாடுபடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர போராட்ட காலத்துக்கு முன்னரே தொடங்கியது இந்த மொழிப்போர், விடுதலைப் போராட்டம். 1938-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்று அரசாணை வெளியிடப்பட்டது. அப்போதைய மதராஸ் மாகாணத் தலைவர் ராஜகோபாலாச்சாரி, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கினார்.

இதனை எதிர்த்து ஏற்கெனவே கனன்று கொண்டிருந்த தமிழ் உரிமை போருக்கான தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால், மொழிப்போர் தியாகிகள் நடராஜனும், தாளமுத்துவும். போராட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மருத்துவச் சிகிச்சை பெற வேண்டுமெனில், மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கைக்கு மறுத்து, சிறையிலே வாழ்வைத் துறந்தனர்.

1938ல் இந்தி எதிர்ப்பில் தனித் தமிழ்நாடு கேட்டு தமிழ்வாழ்க சேலை கட்டியதற்காக கைது செய்யப்பட்ட பத்மாவதி காவல்துறையினரால் துன்புறத்தப்பட்டு உயிர் துறந்தார். 1948 ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தனலட்சுமி, காவல் லாரியில் ஏற்றிச்சென்று 40 மைலுக்கு அப்பால் திரும்பி வரவே முடியாத அளவுக்கு தொந்தரவு செய்ததால் கருச்சிதை ஏற்பட்டு நோயுற்று அதே காரணத்தால் உயிர் துறந்தார்.

இவ்வாறு மொழிப்போருக்கான விதை தூவப்பட்டது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிக்கப்படுகிறது. தமிழ் மொழி உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு இந்த தினத்தில் அஞ்சலியும் செலுத்தப்படுகிறது.

மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வீர வணக்கம் செலுத்துவது வழக்கம். மேலும், திமுக, திராவிடக் கழகம் உள்ளிட்டவைகள் தமிழ்மொழியையும், தமிழ் உணர்வையும் உயர்த்திப் பிடித்து வருகின்றன.

அத்துடன் நாம் தமிழர் கட்சி, தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. அக்கட்சியின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது தமிழ் பேச்சால் இளைஞர்களை கட்டிப்போட்டுள்ளார். விஜய்யின் கட்சிக் கொடி அறிமுக விழாவிற்கும் சீமான் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ் மக்கள் தங்கள் வாழ்வோடு மொழியை பிணைத்துள்ள நிலையில், விஜய்யின் இந்த உறுதிமொழி வாசகம் தமிழ் உணர்வுள்ள மக்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியாகவும், திமுக, நாதக அபிமானிகளை கவரும் வகையிலும் இடம்பெற்றுள்ளதாக பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow