அமெரிக்காவில் ஓமியம் நிறுவனத்துடன் ரூ 400 கோடி ஒப்பந்தம் கையெழுத்து..500 பேருக்கு வேலைவாய்ப்பு

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் 400 கோடி ரூபாய் மதிப்பில் ஓமியம் என்ற நிறுவனத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

Sep 1, 2024 - 11:44
 0
அமெரிக்காவில் ஓமியம் நிறுவனத்துடன் ரூ 400 கோடி ஒப்பந்தம் கையெழுத்து..500 பேருக்கு வேலைவாய்ப்பு
tn cm mk stalin mou sign ohmium rs 400 cr deals us visit

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், கடந்த 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றார். தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் ஓமியம் என்ற தனியார் நிறுவனத்துடன் 400 கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆலை அமைக்கப்பட்டு 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. எலக்ட்ரோலைசர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் சார்ந்த உற்பத்தியில் ஓமியம் நிறுவனம் முன்னணி வகித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் 31.8.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குவதோடு, 39 ஆயிரத்துக்கும் மேலான தொழிற்சாலைகள், 2.6 மில்லியன் அளவிற்கு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள், என இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சி மையங்கள் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு, மனிதவளங்கள் மற்றும் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தின் போது, சான்பிரான்சிஸ்கோவில் 29.8.2024 அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதனையடுத்து 30.8.2024 அன்று முதலமைச்சர் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 31.8.2024 அன்று சான்பிரான்சிஸ்கோவில், ஓமியம்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. ஓமியம் நிறுவனம், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி அளவிடக்கூடிய புரோட்டான் பரிமாற்ற சவ்வு எலக்ட்ரோலைசர் அமைப்புகளை வடிவமைத்து, உற்பத்தி செய்கிறது. 

ஓமியம் நிறுவனமானது அமெரிக்கா, மெக்சிகோ, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் திட்டக் குழாய்களை அமைத்துள்ளது.
முதலமைச்சர் முன்னிலையில் ஓமியம் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலீட்டு ஊக்குவிப்பு துறை செயலாளர் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே. விஷ்ணு, ஓமியம் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆன் பாலன்டைன், தலைமை தொழில்நுட்ப அலுவலர் சொக்கலிங்கம் கருப்பையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow