DPL T20 Match Highlights : நேற்று நடைபெற்ற டெல்லி பிரீமியர் டி20 லீக் போட்டியில், தெற்கு டெல்லி ஸ்டார்ஸ் அணியும், வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதின. இதில், தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் சர்தாக் ரே 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்த ஆயுஷ் பதோனி வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் சின்னாபின்னமாக சிதைத்தனர்.
இருவரும் இணைந்து, இரண்டாவது விக்கெட்டுக்கு 286 ரன்கள் அடித்தனர். அட்டகாசமாக ஆடிய ஆயுஷ் பதோனி 55 பந்துகளில் 19 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உட்பட 165 ரன்கள் குவித்தார். அதேபோல், பிரியான்ஷ் ஆர்யா 50 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் உட்பட 120 ரன்கள் குவித்தார். மேலும், ஒரு ஓவரின் 6 பந்துகளையும், சிக்ஸருக்கு விரட்டினார்.
இதனையடுத்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு, 308 ரன்கள் குவித்தது. இந்திய லீக் போட்டியில் ஒரு அணியால் அடிக்கப்பட்ச ரன்கள் என்ற சாதனையை தெற்கு டெல்லி ஸ்டார்ஸ் அணி படைத்தது. மேலும், ஒட்டுமொத்த லீக் போட்டிகளில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகப்பட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்னதாக, நேபாள் அணி 314 ரன்கள் குவித்து சாதனை படைத்து முதலிடத்தில் உள்ளது.
இதனையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து, 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அந்த அணியில் அதிகப்பட்சமாக பிரான்ஷு விஜய்ரன் 32 பந்துகளில் [4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்] 62 ரன்களும், வைபவ் ராவல் 14 பந்துகளில் [2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்] 32 ரன்களும், யாஷஸ் ஷர்மா 18 பந்துகளில் [3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி] 32 ரன்களும் எடுத்தனர். தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி தரப்பில் ராகவ் சிங் 3 விக்கெட்டுகளையும், டிக்வேஷ் ரதி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.