Russia Ukrain War : ரஷ்யாவின் சுட்ஷா நகரத்தை கைப்பற்றிய உக்ரைன்.. பதற்றம் அதிகரிப்பு!
Russia Ukrain War : ரஷ்யாவின் குர்ஸ் (Kursk) பிராந்தியத்திற்குட்பட்ட சட்ஜா நகரை (Sudzha) தங்களது படைகள் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Russia Ukrain War : கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக தொடர்ந்து நீடிக்கும் இந்த போரில் உக்ரைன் நாட்டின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. ஆனாலும், ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் கடுமையாக போராடி வருகிறது. போரை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் ரஷ்யாவை நேரடியாக வலியுறுத்தின. ஆனாலும், ரஷ்யா தனது தாக்குதலைத் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதேநேரம் ரஷ்யாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் உதவி செய்து வருகின்றன.
இந்நிலையில், திடீர் திருப்பமாக ரஷ்யாவின் சுட்ஷா நகரை உக்ரைன் கைப்பற்றியுள்ளது, இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. குர்ஸ் பிராந்தியத்திற்கு உட்பட சுட்ஷா நகரத்தில் கிட்டத்தட்ட 5,000 பேர் வசிக்கின்றனர். மேற்கு சைபீரியாவின் எண்ணெய் படிவுகளில் இருந்து பாயும் குழாய்கள் இந்தப் பகுதிகளில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ரஷ்யாவில் கைப்பற்றப்பட்ட சட்ஜா நகரில், உக்ரைனின் இராணுவ தளபதி அலுவலகத்தை நிறுவுவதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டில் சுமார் 1,175 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை ரஷ்யா ஆக்கிரமித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இப்போது முதல் முறையாக ரஷ்யா பகுதியை ஆக்கிரமித்துள்ளது உக்ரைன். அதன்படி ரஷ்யாவுக்கு சொந்தமான கிட்டத்தட்ட 800 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை உக்ரைன் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான, நோர்ட் ஸ்ட்ரீம் இயற்கை எரிவாயு குழாய்களின் வெடிப்புகளின் பின்னணியில் உக்ரேனிய படைகள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளன. இதுகுறித்து சர்வதேச அளவில் வெளியாகும் செய்திகளில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர், ரஷ்யாவை சேதப்படுத்துவதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க - வங்கதேசத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு...
அதாவது, ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவுக்குச் செல்லும் எரிவாயு குழாய்களை வெடிக்கச் செய்யுமாறு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு தொழிலதிபர் ஒருவர் ஆர்டர் போட்டதாகத் தெரிகிறது. இதனை செயல்படுத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடந்த 2022ம் ஆண்டே ஒப்புதல் அளித்துள்ளாராம். ஆனால், இந்த விவகாரம் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவுக்கு தெரிந்ததால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பின்வாங்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அப்போது உக்ரேனிய இராணுவ அதிகாரியாக இருந்த ஜலுஸ்னி, அதிபர் ஜெலென்ஸ்கிக்கு தெரியாமல் பால்டிக் கடலில் குழாய்களை வெடிக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள உக்ரைன், குழாய் வெடிப்புகளில் தாங்கள் சம்பந்தப்படவில்லை என விளக்கம் கொடுத்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் சுட்ஷா பகுதியை உக்ரைன் கைப்பற்றியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முன்னேறி செல்வதால், அண்டை பிராந்தியமான பெல்கொரோடிலும் அவசரநிலையை அறிவித்துள்ளது ரஷ்யா. கூர்ஸுக்குள் பீரங்கிகள், கவச வாகனங்களுடன் சுமார் 1,000 உக்ரைன் படையினர் நுழைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக சுட்ஷா பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், மக்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது.
What's Your Reaction?