'டோன்ட் வொரி'.. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு.. பிரதமர் மோடியிடம் உறுதியளித்த முகமது யூனுஸ்!
தலைநகர் டெல்லியில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கவலை தெரிவித்தார். ''வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியர்களும் கவலைப்படுகின்றனர்'' என்று மோடி கூறியிருந்தார்.
டாக்கா: வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். முதலில் போராட்டம் அமைதியாக நடந்த நிலையில், பின்பு பெரும் வன்முறையாக உருவெடுத்தது. இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்த, அவர்களுக்கு ஆளும் கட்சியான அவாமி லீக் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்டனர். இந்த மோதலில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். வங்கதேசத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், ஆளும் கட்சிக்கு சொந்தமான கட்டடங்கள் ஹோட்டல்கள் ஆகியவற்றுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பின்னர் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் இந்துக்களுக்கு எதிரான வன்முறையாக மாறியது.
வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் கோயில், காளி கோயில் உள்பட பல்வேறு இந்து கோயில்களுக்கு தீ வைக்கப்பட்டன. சில இடங்களில் இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கிடையே வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளதால், வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்துக்கள் மீதான தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து பின்பு பின்வாங்கியவரும், இந்திய வம்சாவளியுமான விவேக் ராமசாமி கூறியிருந்தார்.
இதேபோல் நேற்று தலைநகர் டெல்லியில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கவலை தெரிவித்தார். ''வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியர்களும் கவலைப்படுகின்றனர். வங்கதேசம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எப்போதும் இந்தியாவின் விருப்பமாகும். வங்கதேசத்தில் விரைவில் நிலைமை சீராகும் என்று நாங்கள் நம்புகிறோம். அங்குள்ள இந்துக்கள், சிறுபான்மையினர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்தியர்கள் விரும்புகின்றனர்'' என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், பிரதமர் மோடியிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ''பேராசிரியர் முகமது யூனுஸ் என்னிடம் தொலைபேசியில் பேசினார். வங்கதேசத்தில் நிலவும் சுழ்நிலை குறித்து இருவரும் பேசினோம்.
வங்கதேசத்தில் மீண்டும் ஜனநாயகம் மலரவும், அமைதி திரும்பவும், வளர்ச்சி அடையவும் இந்தியா துணையாக இருக்கும் என்று மீண்டும் உறுதி அளித்தேன். அப்போது வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என முகமது யூனுஸ் தெரிவித்தார்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
What's Your Reaction?