சினிமா

விசா இல்லாமல் வெளிநாட்டு நடிகர்களுடன் சூட்டிங்.. ‘சூர்யா44’ திரைப்படத்திற்கு புது சிக்கல்?..

சூர்யா தற்போது நடித்துவரும் படப்பிடிப்பில் அனுமதியின்றி ரஷ்யா மற்றும் ஆப்கன் நாட்டவர்களை பங்கேற்க செய்தது தெரியவந்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

விசா இல்லாமல் வெளிநாட்டு நடிகர்களுடன் சூட்டிங்.. ‘சூர்யா44’ திரைப்படத்திற்கு புது சிக்கல்?..
‘சூர்யா 44’ திரைப்படத்திற்கு புது சிக்கல்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யாவின் 44வது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. சூர்யா தவிர, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், சுஜித் சங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தினை ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் மற்றும் சூர்யாவின் சொந்த நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. மேலும், சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இதற்கிடையில், கடந்த மாதம் சூர்யாவின் 44வது திரைப்படத்தின் ‘கிளிம்ப்ஸ்’ வீடியோவை படக்குழு வெளியிட்டது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஊட்டியில் உள்ள ஆரம்பிரிட்ஜில் உள்ள நவாநகர் பேலஸில் 20 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த சில நாட்களில் அங்கு படப்பிடிப்பை முழுமையாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது புது சிக்கல் எழுந்துள்ளது.

அதாவது, சூர்யா 44 படப்பிடிப்பில் சுற்றுலா விசாவில் இந்தியா வந்த 100க்கும் மேற்பட்ட ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களை அனுமதியின்றி பங்கேற்க வைத்ததாக புகார் எழுந்தது.

குடியேற்ற விதிகளின்படி, வணிக அல்லது வேலை விசாவில் இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் மட்டுமே ஊதிய வேலைகளில் ஈடுபடலாம். சுற்றுலா விசாவில் வந்தால் ஊதியம் பெற அனுமதி மறுக்கப்படுகிறது.

இந்த நிலையில் அனுமதியின்றி சூர்யா 44 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற வெளிநாட்டவரிடம் நீலகிரி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்திய குடியேற்ற விதிகள் குறித்து ஏஜெண்டுக்கும் தெரியாது என்பதால் இந்த தவறு நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரியிடம் கேட்டபொழுது இதைப் போன்று எந்த சர்ச்சையும் எழவில்லை என்றும் விசாரணையில் அவர்களிடம் உரிய அனுமதி உள்ளது என தெரியவந்துள்ளது.