Paralympics: பாராலிம்பிக்கில் தொடர்ந்து 3வது முறை பதக்கம்... வரலாற்று சாதனை படைத்த மாரியப்பன்!

பாராலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 3வது முறையாக பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Sep 4, 2024 - 13:14
Sep 4, 2024 - 16:40
 0
Paralympics: பாராலிம்பிக்கில் தொடர்ந்து 3வது முறை பதக்கம்...  வரலாற்று சாதனை படைத்த மாரியப்பன்!
பாராலிம்பிக்கிப் போட்டியில் மாரியப்பன் சாதனை

சென்னை: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் மாரியப்பன் தங்கவேலு, ஷரத் குமார், ஷைலேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். மாரியப்பன் 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலு கடந்த 2016 ஆம் ஆண்டு பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றார். அதேபோல் 2020 ஆம் ஆண்டு பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்தாண்டும் வெண்கலம் வென்ற மாரியப்பன், தொடர்ந்து 3வது முறையாக பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையை தன்வசமாக்கினார்.  

இதேபோல் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் ஷரத் குமார் 1.88 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அஜீத் சிங் வெள்ளிப் பதக்கத்தையும் சுந்தர் சிங் வெண்கலப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்திய வீரர் அஜீத் சிங் 65.62 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் 64.96 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும், மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற தீப்தி ஜீவன்ஜி, 55.82 வினாடியில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். 

இதன்மூலம் இந்தியா மொத்தம் 20 பதக்கங்களை வென்று புள்ளிப் பட்டியலில் 19வது இடத்தை பிடித்துள்ளது. அதில், 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கல பதக்கங்கள் அடங்கும். 115 பதக்கங்களை வென்றுள்ள சீனா முதலிடத்திலும், 61 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளன. அதேபோல், அமெரிக்கா 53 பதக்கங்கள், பிரேசில் 48, பிரான்ஸ் 38, இத்தாலி 35, உக்ரைன் 45, ஆஸ்திரேலியா 32 பதக்கங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்நிலையில், பாராலிம்பிக்கில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மாரியப்பனுக்கு வாழ்த்துத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள்! தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்।” என பதிவிட்டுள்ளார். 

அதேபோல், உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷரத்குமார், ஈட்டி எறிதல் போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்கள் அஜீத் சிங், சுந்தர் சிங், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலம் வென்ற தீப்தி ஜீவன்ஜி ஆகியோருக்கும் அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow