குரு மங்கள யோகம்.. கூடவே சூரியன்.. ராகுவின் ஆதரவு.. நவகிரகங்களை கூட்டணி சேர்த்த விஜய் கட்சி கொடி

அரசை ஆள்வதற்கு தேவையான முக்கிய அம்சங்களாக பார்க்கப்படும் சூரியன், செவ்வாய், குரு ஆகிய மூன்று கிரகங்களின் காரகத்துவத்தையும் பெற்ற கொடியாக நவ கிரகங்களின் கூட்டணியோடு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அமைந்துள்ளது.

Aug 22, 2024 - 11:19
 0
குரு மங்கள யோகம்.. கூடவே சூரியன்.. ராகுவின் ஆதரவு.. நவகிரகங்களை கூட்டணி சேர்த்த விஜய் கட்சி கொடி
tvk flag astrology

தமிழக அரசியலில் வெற்றி பரணி பாடப்போகிறார் நடிகர் விஜய் இதை குறிக்கும் வகையில் தனது கொடியில் யானைகளையும், வாகை மலரையும் இடம் பெறச் செய்துள்ளார்.கொடியில் இடம் பெற்றுள்ள வண்ணங்கள் மஞ்சளும் சிவப்பும் குரு பகவானையும் செவ்வாய் பகவானையும் இணைத்து குரு மங்கள யோகத்தையும் பெற்றுள்ளது. தவெக கொடியில் என்னென்ன சிறப்புகள் இடம் பெற்றுள்ள என்று பார்க்கலாம். 

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்வைத்து இப்போது முதலே பணிகளை தொடங்கி விட்டார். அரசியல் கட்சியின் அடிப்படையே கொடிதான். அந்த கொடியை இன்று அறிமுகம் செய்து வைத்தார் விஜய். 


தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்தார். கட்சி கொடியில் சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொடியில் இடம்பெற்றுள்ள வாகை என்பது வெற்றியை குறிக்கும். வாகை மரம் வலுவான மரமாகும். தமிழீழத்தின் தேசிய மரமாகும். சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன

"வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை-அதிரப்
பொருவது தும்பையாம்; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்" 

என்று தொல்காப்பியத்தில் வாகை மலர் குறித்த குறிப்புகள் உள்ளது. அதேபோல், கொடியில் இடம்பெற்றுள்ள சிவப்பு நிறம் என்பது வீரம் மற்றும் வெற்றியை குறிப்பதோடு, செவ்வாய் கிரகத்தின் முக்கிய அம்சமாகும்.யானை, மஞ்சள் குருபகவானின் அம்சங்களை குறிப்பதோடு, அதில் உள்ள 28 நட்சத்திரங்களை கூட்டினால் 2+8=10=1 சூரியனின் அம்சமாக பார்க்கப்படுகிறது. 

அரசை ஆள்வதற்கு தேவையான முக்கிய அம்சங்களாக பார்க்கப்படும் சூரியன், செவ்வாய், குரு ஆகிய மூன்று கிரகங்களின் காரகத்துவத்தையும்  பெற்ற கொடியாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அமைந்துள்ளது. போரிலே ஆயிரம் யானைகளை கொன்ற வெற்றி வீரனை பாட்டுடைத் தலைவனாக கொண்டு பாடப்படும் இலக்கியமே பரணி.கட்சி கொடியின் பாடல்களில் யானைகளை போர்க்களத்தில் வீழ்த்துவது போல உள்ளது.

கொடியில் இடம்பெற்றுள்ள யானை குறித்து சங்க இலக்கியமான கலிங்கத்து பரணியில் இடம்பெற்றுள்ளது. போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனுக்கு பாடப்படுவது பரணி இலக்கியம். நெடுங்காலமாக போர்க்களத்தில் நிலைத்து நின்ற, வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்ட, யாராலும் வெல்ல முடியாத மாவீரனால் மட்டுமே அத்தனை யானைகளை கொன்று குவிக்க முடியும். அதைபோல், தனது கொடியில் யானைகளை விஜய் பயன்படுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால், இதில் விஜய் பயன்படுத்தியது ஆப்பிரிக்க யானைகள் என்று கூறப்படுகிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் தமிழ்நாட்டு யானைகளை பயன்படுத்தாமல் ஆப்பிரிக்க யானையை பயன்படுத்தியது ஏன் என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

பாடலில் இடம்பெறும் காட்சிகளில் வாளை ஏந்துவது போல இடம்பெற்றுள்ளது. விஜய்யின் பூச நட்சத்திரத்திற்கு வாள் என்பது சாதகமான என்பது அம்சமாகும்.  வாள் ஏந்துவது என்பது அரசியல் போருக்கு தயாராகும் போர்வீரனின் அடையாளம்.
 
விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22.. எனவே 2+2 ஐ கூட்டினால் 4, பிப்ரவரி 2 கட்சியை தொடங்கிய நாள் 2 + 2 = 4, இன்றைய தேதி ஆகஸ்ட் 22 என்பது 2+2 கூட்டினால் 4,  இன்று விஜய் பயணித்த காரின் எண் 1111 அவற்றை கூட்டினாலும் 4 என்ற எண் வருகிறது. 4 எண் என்பது ராகுவின் அம்சமாகும். ராகு என்பவர் வெற்றியை வேகமாக பரிசளிக்க கூடியவராக பார்க்கப்படுகிறது. 

இது தவிர யானை விநாயகரின் அம்சமாக பார்க்கப்படுகிறது. கேது பகவானின் அதி தேவதை விநாயகர் ஆவார்.கொடியில் இடம்பெற்றுள்ள 23 பச்சை நட்சத்திரங்கள் புதனை குறிப்பதாகக் கூறப்படுகிறது. இது அரசியல்வாதிகள் ஆதர்சயமான கிரகமாக பார்க்கப்படுகிறது. 5 நீல நட்சத்திரங்கள் என்பது சனிபகவானை குறிப்பதோடு, சனிபகவான் உதவி இருந்தால் தொண்டர்களின் பேராதரவை பெறலாம் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் நவ கிரகங்களின் துணையோடு பெற்றோர்களின் ஆசியோடு கொடியை அறிமுகம் செய்துள்ளார் நடிகர் விஜய்.பிரபலமான ஜோதிடர் ஒருவரின் ஆலோசனையின் பேரிலேயே கொடியை வடிவமைத்து வர்ணங்களையும் சேர்த்துள்ளார் விஜய்.இந்த கொடிக்கு தொண்டர்களின் ஆதரவு எப்படி இருக்கும் என்பதை 2026 சட்டசபை தேர்தல் முடிவு செய்யும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow