திமுகவை யாரும் மிரட்ட முடியாது.. மிசாவிற்கே பயப்படாதவர்கள் நாங்கள்.. அமைச்சர் ரகுபதி

எங்களுடைய நண்பர்கள் யாரும் எங்களை மிரட்ட முடியாது. திமுகவை எந்த கட்சியும் மிரட்ட முடியாது, மிசா காலத்திலேயே நாங்கள் பயப்படாதவர்கள். திமுக எந்த மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் பயப்படக்கூடிய கட்சி அல்ல. எங்களை நம்பி வந்தவர்களை நாங்கள் மோசம் செய்ய மாட்டோம்.

Sep 12, 2024 - 11:59
 0
திமுகவை யாரும் மிரட்ட முடியாது.. மிசாவிற்கே பயப்படாதவர்கள் நாங்கள்.. அமைச்சர் ரகுபதி
tamil nadu minister ragupathi talks about tirumavalavan

தோழமைக் கட்சிகளுக்கான மரியாதையை இந்தியாவிலேயே எந்த கட்சியும் கொடுக்காத வகையில் மரியாதை கொடுப்பவர் நம்முடைய முதலமைச்சர். அதனால் திருமாவளவன் எங்களை மிரட்ட மாட்டார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மகாவிஷ்ணு விவகாரத்தில், அவரது  வங்கி கணக்கில் பணம் வரவு வைத்துள்ளதா என்பது பற்றி விசாரணை நடத்துவதில் எந்த தவறும் இல்லை.இந்த விவகாரத்தில் நாங்கள் யாரையும் பழி வாங்க மாட்டோம் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை, திருச்சி சாலையில் உள்ள அய்யனார் திடலில்  வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவிலான முகாம் இன்று நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்து, வேளாண் இயந்திர கருவிகள் குறித்த கையேட்டினை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,சிறைக் கைதிகளை விடுவிப்பதில் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. அதுவே நம்முடைய கருத்தாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

காவிரி - வைகை - குண்டாறு திட்டத்தில் எதையும் முறையாக செய்யாமல் அடிக்கல் நாட்டி விட்டு, நாங்கள் திட்டத்தை தொடங்கி விட்டோம் என்று சொல்வதால் மட்டும் பயனில்லை. இந்தத் திட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலம் எடுப்புகள் முடிந்த பிறகு தான் கால்வாய்கள் வெட்ட முடியும். நிலங்களை எடுத்த பிறகுதான் அதற்கான முறையான பணிகளை தொடங்க முடியும், ஏற்கனவே அதற்கான அடிப்படையான பணிகளை செய்யவில்லை. அதை தமிழக அரசு இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறது என்றார்.

திமுகவை திருமாவளவன் மிரட்டுவதாக எல்.முருகன் கூறிய கருத்திற்கு பதிலளித்த அவர்,எங்களுடைய நண்பர்கள் யாரும் எங்களை மிரட்ட முடியாது. திமுகவை எந்த கட்சியும் மிரட்ட முடியாது, மிசா காலத்திலேயே நாங்கள் பயப்படாதவர்கள். திமுக எந்த மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் பயப்படக்கூடிய கட்சி அல்ல. எங்களை நம்பி வந்தவர்களை நாங்கள் மோசம் செய்ய மாட்டோம். அவர்களுக்கு உண்மையான நண்பராக இருப்பவர் தான் முதலமைச்சர், தோழமைக் கட்சிகளுக்கான மரியாதையை இந்தியாவிலேயே எந்த கட்சியும் கொடுக்காத வகையில் மரியாதை கொடுப்பவர் நம்முடைய முதலமைச்சர். அதனால் திருமாவளவன் எங்களை மிரட்ட மாட்டார்.

குண்டர் சட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கையைப் பெற்று மாவட்ட ஆட்சியர் அதற்குண்டான பரிந்துரையை செய்கிறார். அதன் அடிப்படையிலேயே உள்துறை அதற்கான ஒப்புதலை தருகிறது. வழக்குகள் இல்லாத யாரையும்  குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது கிடையாது. குற்றச்சாட்டு அடிப்படையில் தான் குண்டர் சட்டம் போடப்படுகிறது. அப்படி ஒரு சில தவறுகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டுமேயானால் அதை திருத்திக் கொள்வோமே தவிர, நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. யார் மீது வேண்டுமென்றே குண்டர் சட்டத்தை பயன்படுத்துவதில்லை.

மீனவர்கள் சிறை பிடிப்பது தொடர்பாக தமிழக அரசு அழுத்தம் கொடுக்க முடியுமே தவிர, கடல் எல்லை என்பது மத்திய அரசின் கையில் உள்ளது. கடல் பாதுகாப்பு மாநில அரசின் கையில் இல்லை. கடலோர பாதுகாப்படைக்கு மட்டுமே நாம் அழுத்தம் கொடுக்க முடியும். உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக முதல்வர் இது தொடர்பாக கடிதம் எழுதி வருகிறார். அடிக்கடி கடிதம் எழுதி இதன் மூலமாக சிலரை விடுதலை செய்யவும் வைத்திருக்கிறோம். படகுகளை மீட்டுவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக முதல்வர் எடுத்து வருகிறார். மீனவர் பிரச்சனை என்பது தமிழக அரசு பிரச்சனை மட்டுமல்ல, மத்திய அரசின் பிரச்சனை, இலங்கை அரசிடம் மத்திய அரசுதான் பேசி இதற்கு தீர்வு காண வேண்டும்.

மகாவிஷ்ணு விவகாரத்தில், அவரது வங்கிக் கணக்கில் பணம் பரிவர்த்தனை நடைபெற்று உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்ததான் செய்வார்கள். வங்கி கணக்கில் பணம் வரவு வைத்துள்ளதா என்பது பற்றி விசாரணை நடத்துவதில் எந்த தவறும் இல்லை. அவர் வங்கி கணக்கில் பணம் வந்துள்ளதா என்பது பற்றி குற்றம் சாட்டவில்லை. விசாரணை தான் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் நாங்கள் யாரையும் பழி வாங்க மாட்டோம் என்றும் அமைச்சர்  ரகுபதி கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow