தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறுத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர் தரமான கல்வியை கிடைக்கச் செய்து அவர்களது வாழ்வை முன்னேற்றும் வகையில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொருளாதார சூழ்நிலையால் கல்வி எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மிதிவண்டிகள் உள்ளிட்ட பல்வேறு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடப்பு கல்வியாண்டில் (2024 - 2025) 56 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் 4,533 மாணவர்களுக்கும், 5,263 மாணவிகளுக்கும் என மொத்தம் 9,796 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொகுதி வாரியாக ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 11ம் வகுப்பு பயிலும் 129 மாணவர்கள், 49 மாணவிகளுக்கும், அரியலூர் நிர்மலா (பெண்கள்) மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 430 மாணவிகளுக்கும், அரியலூர் சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 81 மாணவர்கள், 16 மாணவிகள் என மொத்தம் 210 மாணவர்கள், 495 மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சிகள், மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி தலைமையில், அரியலூர் எம்.எல்.ஏ சின்னப்பா உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் அரியலூரில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக அம்மாவட்டத்தில் உள்ள 64 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 3,102 மாணவர்கள், 3,377 மாணவியர்கள் என மொத்தம் 6,479 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 3.13 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நாக பஞ்சமி கருட பஞ்சமி - திருமணத்தடை, புத்திரபாக்கிய தடை நீக்கும் விரதம்
விலையில்லா மிதிவண்டித் திட்டம் முதன்முதலில் மாணவிகள் தங்களது கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்டது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2001ம் ஆண்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் முன்பு உயர்நிலைக் கல்வி படிக்கும் SC/ST பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மட்டுமே இருந்தது. பின்னாளில் இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித வேறுபாடுமின்றி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.