சென்னையில் swiggy ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.. 'அந்த' வார்த்தைதான் காரணமா?

Swiggy Delivery Boy Death in Chennai : உணவு டெலிவரி செய்வதில் ஏற்பட்ட தகராறில் swiggy ஊழியர் மீது பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் மன உளைச்சலில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Sep 18, 2024 - 10:32
Sep 18, 2024 - 13:48
 0
சென்னையில் swiggy ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.. 'அந்த' வார்த்தைதான் காரணமா?
swiggy employee hangs himself in chennai

Swiggy Delivery Boy Death in Chennai : கல்லூரியில் படித்துக்கொண்டே உணவு டெலிவரி வேலை செய்து வந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் தற்கொலைக்குக் காரணம் மன உளைச்சல் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கொளத்தூர் வரலட்சுமி நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மூத்த மகன் பவித்திரன் (21). வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் பி‌காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.‌ இளைய மகள் கோகிலா அண்ணாமலையில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

 கல்லூரி மாணவன் பவித்திரன் படித்துக்கொண்டே பகுதி நேரமாக உணவு டெலிவரி நிறுவனத்தில் டெலிவரி செய்யும்வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 11 ஆம் தேதி கொரட்டூர் ஏவிஎஸ் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நிஷா என்பவர் swiggy ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அப்போது பவித்திரன் அந்த பெண்மணி குறிப்பிட்ட லொக்கேஷனுக்கு சென்று பார்த்த போது அங்கு யாரும் இல்லாததால் சுற்றி அலைந்தார். பின்னர் நிஷாவை தொடர்பு கொண்டு கேட்ட போது தற்போது நீ எங்கள் வீட்டின் பின்புறத்தில் இருப்பதாகவும் ஆகையால் முன்பக்கம் வந்து உணவு கொடுத்து விட்டு செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

அதற்கு பவித்திரன் நீங்கள் அனுப்பிய லோக்கேசனில் தான் நிற்கின்றேன் , இங்கு வந்து உணவை வாங்கி செல்லுமாறு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த நிஷா ஊழியர் பவித்திரனை தகாத வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது.இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான பவித்திரன் 13 ஆம் தேதி நிஷா வீட்டிற்கு சென்று கல்லால் ஜன்னல் கண்ணாடியை உடைத்து விட்டு வந்துள்ளார். அதன்பிறகு 15 ஆம் தேதி துபாயில் இருந்து வந்த கணவரிடம் நிஷா நடந்தவற்றை கூற உடனே அவரது கணவர் இது குறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.‌ 

புகாரின் பேரில் காவல்துறையினர் பவித்திரனை விசாரணைக்கு அழைத்து சென்று அவர் மீது 75 சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அனுப்பி வைத்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கல்லூரி மாணவன் பவித்திரன் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் கொளத்தூர் போலீஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று பவித்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் பவித்திரன் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த கடிதத்தில் என் மரணத்திற்கு காரணம் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அந்த உணவு டெலிவரி செய்ய சென்ற இடத்தில் அவர்கள் என்னை கடும் வார்த்தையால் திட்டியதால் மட்டுமே. அது போன்ற பெண்கள் இந்த உலகில் இருக்கும் வரை பல மரணங்கள் நிகழும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பெண்ணிடம் இது குறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வாகாது. தற்கொலை எண்ணம் தோன்றினாலோ மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் www.sas.snehaindia.org என்ற இணையதளம் மூலமாகவும், [email protected] என்ற மின்னஞ்சல், 9445120050 தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow