Suriya 45: சூர்யா - AR ரஹ்மான் – RJ பாலாஜி கூட்டணியில் சூர்யா 45... சர்ப்ரைஸ்ஸாக வெளியான அப்டேட்!
சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவுள்ளதாக அபிஸியல் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
சென்னை: சூர்யா ரசிகர்களுக்கு தரமான அப்டேட்டை வெளியிட்டுள்ளது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா, இயக்குநர் ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்துள்ளார். முக்கியமாக சூர்யா – ஆர்ஜே பாலாஜி கூட்டணியில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும் இணைந்துள்ளது, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட்டாக அமைந்துள்ளது. சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படம், 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கங்குவாவை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இப்படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வந்துவிட்டதால், தனது 45வது படத்திற்கு ரெடியாகிவிட்டார் சூர்யா. சூர்யாவின் 45வது படமாக வாடிவாசல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆர்ஜே பாலாஜி இயக்குநராக கமிட்டாகியுள்ளார். சூர்யா – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படம் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனாலும் விடுதலை படம் காரணமாக வாடிவாசல் படப்பிடிப்பை தொடங்க முடியாமல் இருந்தார் வெற்றிமாறன்.
இப்போது விடுதலை 2 ரிலீஸ் தேதியும் கன்ஃபார்ம் ஆகிவிட்டது. இதனால் சீக்கிரமே வாடிவாசல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாடிவாசலுக்கு முன்னதாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் படங்களின் இணை இயக்குநராக பணியாற்றியுள்ள ஆர்ஜே பாலாஜி, தளபதி விஜய்க்கு ஒரு கதை கூறியிருந்தார். ஆனால், அது கன்ஃபார்ம் ஆகாத நிலையில், தற்போது சூர்யாவுடன் இணைந்துள்ளதாக தெரிகிறது. பிரம்மாண்டமாக உருவாகவுள்ள சூர்யா 45 படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சில்லுன்னு ஒரு காதல், ஆயுத எழுத்து, 24 என இதுவரை மூன்று படங்களில் சூர்யா – ஏஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது சூர்யா 45 படத்திலும் ஏஆர் ரஹ்மான் கமிட்டாகியுள்ளார். அதேநேரம் சூர்யா – ஆர்ஜே பாலாஜி – ஏஆர் ரஹ்மான் கூட்டணி, முதன்முறையாக சூர்யா 45 படத்தில் தான் இணைந்துள்ளது. இதனால் சூர்யா 45 படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்தப் படம் பக்கா ஆக்ஷன் ஜானரில் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தற்போது வெளியாகியுள்ள போஸ்டர், சூர்யா ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
What's Your Reaction?