Thanglaan OTT Release: தங்கலான் ஓடிடி பஞ்சாயத்து... நெட்பிளிக்ஸிடம் இருந்து கைமாறிய ரைட்ஸ்!

சீயான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் ஓடிடி ரிலீஸ் பஞ்சாயத்து தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, தங்கலான் ஓடிடி ரைட்ஸ் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கை மாறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Oct 6, 2024 - 22:40
 0
Thanglaan OTT Release: தங்கலான் ஓடிடி பஞ்சாயத்து... நெட்பிளிக்ஸிடம் இருந்து கைமாறிய ரைட்ஸ்!
தங்கலான் ஓடிடி ரிலீஸ் அப்டேட்

சென்னை: பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த திரைப்படம் தங்கலான். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இத்திரைப்படம், ஆக.15ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்கச் சுரங்கத்தை பின்னணியாக வைத்து பீரியட் ஜானரில் உருவான தங்கலான், ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருந்தது. 

அதிகாரத்தின் பெயரால் பழங்குடியின மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரச் சுரண்டலை ரொம்பவே புதிய திரைமொழியில் தங்கலானை இயக்கியிருந்தார் பா ரஞ்சித். தொன்மங்கள், நம்பிக்கைகள், கனவுகள் வழியாக மக்களின் பழங்குடி தன்மையை, நாட்டுப்புற கதைகளில் வரும் பிம்பங்களுளுடன் காட்டியிருந்தார். அதேபோல், தங்கலான் படத்தில் காலனித்துவ விழுமியங்கள் மனிதனை சக மனிதனாக பார்க்கும் இடங்களையும் சுட்டி காட்டிய பா ரஞ்சித், அதன் கோர முகத்தையும் காட்டியிருந்தார். இதுவரை எளிய மக்களின் வாழ்வியலை தனது அடையாள அரசியல் பின்னணியில் இயக்கிய பா ரஞ்சித், இந்தமுறை பழங்குடிகள் மீதான வஞ்சனை குறித்து பேசியிருந்தார்.

அதேநேரம், பா ரஞ்சித்தின் இந்த மாய உலகம் அவரது ரசிகர்களுக்கு எதிர்பார்த்தளவில் திருப்தி கொடுக்கவில்லை. இதனால் தங்கலான் படத்துக்கு சில நெகட்டிவான விமர்சனங்களும் கிடைத்தன. ஆனாலும் இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டியிருந்தனர். இந்நிலையில், தங்கலான் படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடந்த மாதமே நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்க வேண்டிய தங்கலான், இன்னும் சிக்கலில் உள்ளது. 

அதாவது தங்கலான் படத்தின் ஓடிடி உரிமையை சுமார் 60 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், படத்தில் இடம்பெற்றுள்ள சில சர்ச்சையான காட்சிகளையும் வசனங்களையும் நீக்க வேண்டும் என நெட்பிளிக்ஸ் தரப்பில் இருந்து படக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதேபோல், ஓடிடி உரிமை தொகையையும் குறைக்க வேண்டும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. ஆனால், அதற்கு படக்குழுவினர் மறுப்புத் தெரிவித்ததால், ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கேன்சல் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து தற்போது தங்கலான் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தங்கலான் திரைப்படம் விரைவில் அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow