சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படம், கடந்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, யோகி பாபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு, யுவன் இசையமைத்திருந்தார். கோட் படம் மூலம் முதன்முறையாக விஜய் – வெங்கட் பிரபு கூட்டணி இணைந்தது. இதுவே இத்திரைப்படத்துக்கு செம ஹைப் கொடுத்திருந்தது. ஆனால், கோட் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததால், பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் கிடைக்கவில்லை.
திரையரங்குகளைத் தொடர்ந்து தற்போது நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகும் கோட் படத்துக்கு, ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தில் கேமியோவாக நடித்த சிவகார்த்திகேயனுக்கு, விஜய் சூப்பரான கிஃப்ட் கொடுத்து அசத்தியுள்ளார். சின்ன திரையில் இருந்து சினிமாவில் என்ட்ரியான சிவகார்த்திகேயன், இப்போது கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். சிவா ஹீரோவாக நடிக்கத் தொடங்கியது முதல், அவரை விஜய் பாராட்டி வருகிறார். இப்போது விஜய் அரசியலில் களமிறங்கவுள்ளதால், அவரது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு விட்டுக்கொடுப்பதை போல கோட் படத்தில் சீன் வைத்திருந்தார் வெங்கட் பிரபு.
அதாவது, கோட் படத்தின் ஒரு காட்சியில், சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கி ஒன்றை கொடுத்துவிட்டு, ரசிகர்களை நீங்கள் பார்த்துகொள்ளுங்கள் என்பதை மறைமுகமாக கூறும் விதமாக வசனம் இடம்பெற்றது. அப்போது சிவகார்த்திகேயனும் பதிலுக்கு ஒரு வசனம் பேசியிருப்பார். அதில், “உங்களுக்கு எதோ முக்கியமான வேலை இருக்கு, நீங்க அத பாருங்க, நான் இத பார்த்துக்கிறேன்” எனக் கூறுவார். இது விஜய் தனது வாரிசாக அல்லது கோலிவுட்டில் தனது இடம் சிவகார்த்திகேயனுக்காக என சொல்வதை போன்று இருந்தது. அப்போது முதல் இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகி வந்தது.
இந்நிலையில், கோட் படத்தில் விஜய்யும் சிவகார்த்திகேயனும் நடித்த மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய்யும் சிவாவும் செம ஜாலியாக நடித்துள்ளனர், அப்போது சிவகார்த்திகேயனுக்கு வாட்ச் ஒன்றை கிஃப்ட்டாக கொடுத்துள்ளார் விஜய். இந்த வீடியோ கிளிப்ஸ் விஜய், சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் உற்சாகத்தை கொடுத்துள்ளது. முன்னதாக இதேபோல், மங்காத்தா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், அஜித்துக்கும் வாட்ச் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்திருந்தார் விஜய். அஜித்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கும் வாட்ச் பரிசாக கொடுத்த விஜய்க்கு ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே விஜய்யின் தளபதி 69 ஷூட்டிங் நேற்று சென்னையில் தொடங்கியது. விஜய், பூஜா ஹெக்டே இருவரும் நடிக்கும் பாடல் காட்சி முதலில் படமாக்கப்படுவதாகவும், தவெக மாநாடு முடிந்த பின்னர் அடுத்த ஷெட்யூல் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.