Vettaiyan Box Office: வசூல் வேட்டையில் ரஜினியின் வேட்டையன்... முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செம!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம், ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு கடந்த வாரம் 10ம் தேதி வெளியானது. முதல் நான்கு நாட்களில் வேட்டையன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: தசெ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். ரஜினியுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், மல்லுவுட் ஹீரோ ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள வேட்டையன் திரைப்படம், அதிக எதிர்பார்ப்புகளுடன் திரையரங்குகளில் வெளியானது. ரஜினி என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளதால், வேட்டையனில் ஆக்ஷன் தெறிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் ரிலீஸான வேட்டையன் படத்துக்கு, கலவையான விமர்சனங்களே கிடைத்தன. படத்தின் பல காட்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மாஸ் சம்பவம் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, கொஞ்சம் ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஒருசில சீன்ஸ் தவிர மற்ற இடங்களில் ரஜினியின் கூஸ்பம்ஸ் சாகசங்கள் இல்லை எனவும், ஆக்ஷன் காட்சிகளில் தலைவர் அதிகம் ரிஸ்க் எடுக்காமல் நடித்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல், கதை, திரைக்கதை, மேக்கிங், பஞ்ச் டயலாக் ஆகியவைகளும் எதிர்பார்த்தளவில் இல்லையென ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
அதேநேரம், என்கவுன்டருக்கு எதிரான மிக முக்கியமான கருத்தை பதிவு செய்யும் வேட்டையன் படத்தில், ரஜினிகாந்த் நடித்தது வரவேற்புக்குரியது எனவும் பலர் பாராட்டியிருந்தனர். ஆனால், அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், மஞ்சு வாரியரின் கேரக்டர்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றும், அவர்களை வீணடித்துவிட்டதாகவும் விமர்சித்திருந்தனர். இருப்பினும் வேட்டையன் திரைப்படம் கமர்சியலாக ஹிட் அடித்துள்ளது. அதாவது ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையன் ஏமாற்றமாக இருந்தாலும், ஃபேமிலி ஆடியன்ஸ் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இதனால், பாக்ஸ் ஆபிஸில் வேட்டையன் 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, வேட்டையன் திரைப்படம் முதல் நாளில் 65 முதல் 70 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் 55 முதல் 65 கோடி ரூபாயும், மூன்றாவது நாளில் 49 கோடி வரையும் கலெக்ஷன் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக 4வது நாளான நேற்று 40 முதல் 42 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளது. இதன்மூலம் மொத்தம் 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது வேட்டையன். ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய் வரை வசூலித்த நிலையில், அதனையடுத்து ரிலீஸான லால் சலாம் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. இந்நிலையில் வேட்டையன் படத்தின் பட்ஜெட் 300 கோடி என சொல்லப்படும் நிலையில், தற்போது வரை 200 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?