48 ஆண்டுகள் உதவி ஆர்ட் டைரக்டர்.. புற்றுநோயோடு போராடும் துணை நடிகரின் கண்ணீர் கதை..
48 ஆண்டுகளாக உதவி கலை இயக்குநராகவும், துணை நடிகராகவும் பணியாற்றி வந்த செல்லப்பா, புற்றுநோயோடு போராடி வருவதை அடுத்து, திரைத்துறையினர் உதவிபுரிவார்களா என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்.
திரைத்துறையில் ஆஹா... ஓஹோ... என்று இருந்தவர்கள் பின்னாளில் ஆதரவு இல்லாமல் தவிப்பதை நாம் பல செய்திகளில் பார்த்து இருக்கிறோம். அது போல தான் திரைத்துறையில் உதவி ஆர்ட் டைரக்டராகவும், துணை நடிகராகவும் 48 ஆண்டுகள் பணியாற்றியவர் தற்போது கவனிப்பாற்றும் மருத்துவ உதவி கிடைக்காமலும் புற்றுநோயோடு போராடி கொண்டிருக்கிறார்.
1980ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமான விஜயகாந்த் "தூரத்து இடிமுழக்கம்" படத்தில் உதவி ஆர்ட் டைரக்டராக திரைத்துறையில் பணியை தொடங்கிய செல்லப்பா மெலிந்த உடலோடு புற்றுநோயால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார். இதன் பிறகு இயக்குனர் மணிவண்ணன் அறிமுகம் கிடைத்ததால் அவரது அனைத்து படங்களிலும் உதவி ஆர்ட் டைரக்டராக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் துணை நடிகராகவும், காமெடி காட்சிகளிலும் நடித்து செல்லப்பா புகழ் பெற்றார். மேலும் நடிகர் ரஜினிகாந்தின் அன்னை ஓர் ஆலயம், பாட்ஷா, கமல்ஹாசனின் நம்மவர் ஆகிய படங்களில் செல்லப்பா பணியாற்றி உள்ளார்.
இயக்குனர் மணிவண்ணன் படங்களில் தொடர்ந்து பணியாற்றியதால் நடிகர் சத்யராஜ், கவுண்டமணி, விஜயகாந்த், இயக்குனர் சீமான் ஆகியோருடைய நட்பு கிடைத்துள்ளது. இதனால் கவுண்டமணியுடன் சேர்ந்து நகைச்சுவை காட்சிகளில் செல்லப்பா நடித்துள்ளார். சத்யராஜின் 100-வது நாள், அமைதிப்படை, வில்லாதி வில்லன், நாகராஜசோழன் உள்ளிட்ட பல படங்களில் உதவி ஆர்ட் டைரக்டராகவும் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.
சீமான் இயக்கிய தம்பி படத்திலும் கூட செல்லப்பா பணியாற்றி உள்ளார். சுமார் 1000 படங்களில் பணியாற்றி உள்ள செல்லப்பாவின் நிலை தற்போது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. ஆதரவுக்கு யாருமில்லாமல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் படுத்து இருக்கிறார் செல்லப்பா. வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமடைந்து மருத்துவ சிகிச்சை கூட பணமில்லாமல் துயர நிலையில் இருக்கிறார் செல்லப்பா.
மதுரையை சொந்த ஊராக கொண்ட துணை நடிகரான செல்லப்பா திருமணம் செய்து கொள்ளாமல் தனது தங்கையின் குழந்தைகளை வளர்த்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிறகு செல்லப்பாவால் திரைத்துறை பணியில் தொடர முடியவில்லை. வருமானமும் இல்லாததால் அவர் மருத்துவ சிகிச்சை கூட கிடைக்காமல் மிகுந்த பாதிக்கப்பட்டு இருந்த செல்லப்பாவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் பண உதவி செய்து மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.
ஆனால் சில ஆண்டுகளாக எந்த உதவியும் இல்லால் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே வாழ்ந்து வருகிறார் இந்த செல்லப்பா. தனக்கு நடிகர்கள் சத்யராஜ், பிரபு, உள்ளிட்டோர் மிகவும் நெருங்கிய பழக்கம் என்றும், ஆனால் அவர்களை தன்னால் தொடர்பு கொண்டு உதவி கேட்க முடியவில்லை என்றும் கண்ணீரோடு சொல்கிறார் செல்லப்பா.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள செல்லப்பா தன்னுடைய இறுதி நாட்களை எண்ணி கொண்டிருக்கிறார். தற்போது எந்த ஆதரவும் இல்லாமலும் உதவியும் இல்லாமலும் தவிக்கும் தனக்கு நடிகர்கள் தயவு செய்து உதவும் படியும், உணவுக்கூட கஷ்டப்படும் தனக்கு வாழ்வாதாரத்திற்கு தமிழ் திரைத்துறை கருணை காட்ட வேண்டும் என்றும் கண்ணீர் வடித்து கைக்கூப்பி கேட்டுள்ளார் உதவி ஆர்ட் டைரக்டரும், துணை நடிகருமான செல்லப்பா.
செய்தி தொகுப்பு - செய்தியாளர் சுப்பிரமணியன்
What's Your Reaction?