சினிமா

TVK Maanadu: ”விஜய்யின் தவெக மாநாடு... நான் பெரிய ஆள் கிடையாது..” KPY பாலா கிரேட் எஸ்கேப்!

தவெக மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்பது குறித்து KPY பாலா சொன்ன பதில் வைரலாகி வருகிறது.

TVK Maanadu: ”விஜய்யின் தவெக மாநாடு... நான் பெரிய ஆள் கிடையாது..” KPY பாலா கிரேட் எஸ்கேப்!
தவெக மாநாடு குறித்து KPY பாலா

சென்னை: விஜய் டிவி மூலம் பிரபலமான KPY பாலா, ஒருசில படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியின் பெரும்பாலான கேம் ஷோக்களில் பங்கேற்ற இவர், தற்போது மற்றவர்களுக்கு உதவி செய்வதையே தனது முழுநேர வேலையாக வைத்துள்ளார். KPY பாலா உதவி செய்துவருவதை ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். இந்நிலையில், சென்னை பள்ளிக்கரணையில் இருசக்கர வாகன ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட KPY பாலா, டூவீலர் ஷோ ரூமை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அப்போது ஷோரூமில் பணியாற்றும் ஊழியர்கள், அங்கு சென்றிருந்த பொதுமக்கள் ஆகியோர் பாலாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர், 

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த KPY பாலா, அடுத்தடுத்து சில படங்களில் கமிட்டாகி உள்ளதாகவும், ஆனால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்றும் கூறினார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் குறைந்துவிட்டதாக எழுந்த கேள்விக்கு, கடந்த இரண்டு சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இல்லை, ஆகவே அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிவிட்டார். அதேபோல் தொடர்ந்து உதவி செய்து வருவது பற்றி மனம் திறந்த KPY பாலா, நிறைய உதவிகள் செய்ய ஆசை உள்ளது; இருப்பினும் உதவிகளை சொல்லிவிட்டு செய்யும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை, செய்துவிட்டு சொல்லும் சாதாரண ஆள் தான் என்றார். 

அப்போது அவரிடம் விஜய்யின் தவெக மாநாடு குறித்தும், அதில் பங்கேற்பீர்களா எனவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த KPY பாலா, தவெக மாநாடு குறித்து பேசும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை. நான் சாதாரண ஆள் தான், அதுபற்றி பேச எனக்கு வயதும் இல்லை, தகுதியும் கிடையாது, அறிவும் இல்லை என்றார். மேலும், விஜய் மாநாட்டில் பங்கேற்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை என்றும், அதேநேரம் விஜய்யின் தீவிர ரசிகன் தான் எனவும் பதில் கூறி கிரேட் எஸ்கேப் ஆனார்.

தவெக மாநாடு பற்றிய கேள்விக்கு விட்டால் போதும் என எஸ்கேப் மனநிலையில் பதில் சொன்ன KPY பாலா, விஜய் ரசிகர்களுக்கே தக் லைஃப் கொடுத்துள்ளார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் தாடி பலாஜி இணைந்தார். விஜய்யுடன் பல படங்களில் நடித்துள்ள தாடி பாலாஜி, கடந்த சில ஆண்டுகளாக விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதனால் தாடி பாலாஜியை தொடர்ந்து விஜய் டிவி பிரபலமான KPY பாலாவும் விஜய்யின் தவெக-வில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என KPY பாலா எஸ்கேப் ஆகிவிட்டதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். சினிமாவில் இருந்து அரசியலில் களமிறங்கும் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில், வரும் 27ம் தேதி தவெக முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.