சினிமா

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்... SK 25 கூட்டணியில் செம ட்விஸ்ட்!

ஏஆர் முருகதாஸ் இயக்கும் எஸ்கே 23 படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்து சுதா கொங்கரா கூட்டணியில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் கமிட்டாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்... SK 25 கூட்டணியில் செம ட்விஸ்ட்!
சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் லோகேஷ் கனகராஜ்

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோ பிக் மூவியாக உருவாகியுள்ள அமரன் சிவகார்த்திகேயனுக்கு வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனிடையே ஏஆர் முருகதாஸ் இயக்கும் எஸ்கே 23 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து அடுத்தடுத்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. சூர்யா – சுதா கொங்கரா கூட்டணியில் அறிவிக்கப்பட்ட ‘புறநானூறு’ திரைப்படம், படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே ட்ராப் ஆனது. சூர்யாவுடன் நஸ்ரியா நஸிம், துல்கர் சல்மான், பாலிவுட் நடிகர் விஜய் வர்மா ஆகியோர் இப்படத்தில் கமிட்டாகியிருந்தனர். 1960களில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னணியில் இந்தப் படம் உருவாகவிருந்தது. ஆனால், சூர்யா விலகியதால் அவருக்குப் பதிலாக இப்படத்தில் ஹீரோவாக நடிக்க சுதா கொங்கராவின் சாய்ஸ் யார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.

அதன்படி, சுதா கொங்கராவின் சாய்ஸில் சிவகார்த்திகேயன் தான் உள்ளதாகவும், அவரும் இப்படத்தில் நடிக்க ஓக்கே சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து சூர்யா ரிஜெக்ட் செய்த புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆனால், துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிப்பார்களா இல்லையா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. அதேநேரம் சிவகார்த்திகேயன் – சுதா கெங்கரா இணையும் படத்தில் லோகேஷ் கனகராஜ்ஜும் கேமியோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்பு அவர் இயக்கிய மாஸ்டர், ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படங்களில் கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அதேபோல், இனிமேல் என்ற ஆல்பத்தில் ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் செய்திருந்தார். இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால், லோகேஷ் கனகராஜ் இனி நடிப்பதிலும் ஆர்வம் காட்டவுள்ளதாக சொல்லப்பட்டது. அதன்படி, சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் புறநானூறு படத்திலும் கேமியோவாக நடிக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படத்தை இயக்கி வரும் லோகேஷ், சுதா கொங்கராவுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. 

மேலும் படிக்க - ராசியில்லாத நடிகை..? பிரியா பவானி சங்கர் கூல் ரிப்ளே!

சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங், டிசம்பரில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகவுள்ளதாகவும், அதற்கு முன்பாக டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் எஸ்கே 24 படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.