தமிழ்நாடு

‘காணொலி மூலம் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும்’ - செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

‘காணொலி மூலம் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும்’ - செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக உத்தரவு

கடந்த 2014 ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில் கடந்த ஆண்டு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தது. செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டு கடந்து விட்டது. உடல்நிலை உள்பட பல்வேறு காரணங்களை கூறி அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை நீதிமன்றங்கள் தொடந்து தள்ளுபடி செய்து வருகின்றன.

இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், புதிய மனு குறித்து வாதிட அனுமதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு நீதிபதி அனுமதி அளித்த நிலையில் அது தொடர்பான வாதங்கள் செந்தில் பாலாஜி சார்பில் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, செந்தில் பாலாஜி மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி குற்றச்சாட்டுப் பதிவை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். நேரில் ஆஜரப்படுத்தப்படவில்லை என்றால் காணொலி மூலம் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தார்.

இதனையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் குற்றச்சாட்டை பதிவு தள்ளிவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அப்போது காணொளி மூலம் குற்றச்சாட்டுப் பதிவு செய்ய ஆட்சேபம் இல்லை என அமலாக்கத்துறை தெரிவித்தது. இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.