"இந்தி கவிதை சொல்லு” சிறுவனை அடிவெளுத்த டீச்சர்! பெற்றோர்கள் செய்த சம்பவம்!
தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், இந்தியில் கவிதை சொல்லவில்லை எனக்கூறி சிறுவனை ஆசிரியை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் நிலை அறிந்து பெற்றோர் செய்தது என்ன? பள்ளி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....

தமிழ்நாட்டுக்கும் மத்திய அரசுக்கும் இடையே தற்போது மும்மொழிக் கொள்கை விவகாரம் ஏறிமலையாய் குமுறி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய அரசுக்கு எதிராக தொடர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தேசிய கல்வி கொளகையை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் எங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான #SamagraShiksha நிதி ஒதுக்கப்படும் என்பது எவ்விதத்தில் நியாயம்?” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேள்வி எழுப்பி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
அதற்கு, ”கல்வியை அரசியலாக்க வேண்டாம் எனவும், கடந்த 1968ல் இருந்து இந்தியக் கல்வித் திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் அனுப்பியிருந்தார். இப்படி, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இடையே வார்த்தைப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலையில், தமிழ்நாட்டின் தலைநகரில் இந்தியில் கவிதை சொல்ல முடியாததால் மாணவனை ஆசிரியர் அடித்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
சென்னை கீழ்பாக்கத்தில் இயங்கி வரும் சிபிஎஸ்இ பள்ளியில் 3ம் வகுப்பில் உள்ள ஒரு மாணவர் இந்தியை பயின்று வருகிறார். இந்நிலையில், பள்ளியில் அந்த மாணவன், இந்தியில் கவிதை சொல்ல முடியாமல் தவித்ததாக தெரிகிறது. இதனால், கோபமடைந்த இந்தி டீச்சர் பத்மலட்சுமி அந்த மாணவனை தாக்கி, பள்ளிக்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மாணவன் மீண்டும் இந்தியில் கவிதை சொல்லாததால் அவரை மீண்டும் அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவன் தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக புகாரளித்துள்ளனர். இந்நிலையில், பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியையை பணி இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தி படிக்கவில்லை என மாணவனை ஆசிரியை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






