பிரபல ரவுடி பாம் சரவணனை சுட்டு பிடித்த காவல்துறை.. வெடிகுண்டு, பட்டாகத்தி பறிமுதல்

சென்னை முல்லை நகர் சுடுகாடு அருகே தப்பிச் செல்ல முயன்ற பிரபல ரவுடி பாம் சரவணனை புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தற்காப்புக்காக இடது பக்க காலில் சுட்டு மடக்கி பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Jan 16, 2025 - 11:57
 0
பிரபல ரவுடி பாம் சரவணனை சுட்டு பிடித்த காவல்துறை.. வெடிகுண்டு, பட்டாகத்தி பறிமுதல்
பாம் சரவணன்

சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் சரவணன் என்ற பாம் சரவணன். பிரபல ரவுடியான இவர் மீது 6 கொலை வழக்குகள், 2 வெடிகுண்டு வீசிய வழக்கு உள்ளிட்ட 26 வழக்குகள் உள்ளன. ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும், பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளருமான தென்னரசு கடந்த 2015 -ஆம் ஆண்டு ஆற்காடு சுரேஷ் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இறந்த தென்னரசுவின் சகோதரர்தான் பாம் சரவணன்.

3 கொலை வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகாத பாம் சரவணனை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. அவர் தலைமறைவாக இருந்த நிலையில் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் பல்வேறு இடங்களில் தனிப்படை அமைத்து அவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். பாம் சரவணன் எங்கே என போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க திட்டமிட்டு தலைமறைவாக உள்ளதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்து இருந்தது.

இந்நிலையில் பாம் சரவணன், யாருடன் தொடர்பில் இருக்கிறார் என்பது குறித்து ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் அவர் ஆந்திராவில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸார் விரைந்து சென்று  ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதப்பாளையம் பகுதியில் வைத்து ரவுடி பாம் சரவணனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்து வந்தனர். 

எம்கேபி நகரில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாம் சரவணனை தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றபோது பாம் சரவணன் அங்கு மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசி, கத்தியால் காவல் உதவி ஆய்வாளர்  மணியை வெட்டிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. முல்லை நகர் சுடுகாடு அருகே புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் அம்பேத்கர், பாம் சரவணனை தற்காப்புக்காக இடது பக்க காலில் சுட்டு மடக்கி பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காயமடைந்த ரவுடி பாம் சரவணனை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பாம் சரவணன் இடமிருந்து நான்கு நாட்டு வெடிகுண்டுகள், ஒரு கத்தி மற்றும் ஐந்து கஞ்சா பார்சல்களை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அவரது மனைவி வழக்கறிஞர் மகாலட்சுமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாம் சரவணன் கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் ஆகியும் இதுவரை என்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டி புகார் அளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow