கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழக்க, ஓபிஎஸ் முதலமைச்சராக பதவியேற்றார். பின்னர் அவர் ராஜினாமா செய்ய, ஜெயலலிதாவின் தோழியான சசிகலா முதலமைச்சராக வேண்டி, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். அடுத்த ஓரிரு நாட்களில் சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பு வர அவர் கைது செய்யப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பங்களால், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு சசிகலா சிறைக்குச் செல்ல, டிடிவி தினகரன் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டார். ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்-ம் ஓரணியில் இணைந்துக் கொண்டு, டிடிவி தினகரனை அதிமுகவை விட்டு வெளியேற்றிய நிலையில் 2018-ம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார் டிடிவி.
அதன்பிறகு, காலச் சக்கரத்தின் சுழற்சியில் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வர, ஓபிஎஸ்-ம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். சிறைத் தண்டனை முடிந்து சசிகலா வெளியில் வந்த நிலையில் மாறிப்போன காட்சிகளால் பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்ததோடு, கட்சியை மீட்டெடுப்பேன் என்று சபத்தோடு, இன்றளவும் தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்றே அடையாளப்படுத்திக் கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் இந்த மூன்று பேரின் வெளியேற்றத்தால், அதிமுகவிடம் இருந்த குறிப்பிடத் தகுந்த முக்குலத்தோர் சமுதாய மக்களின் ஆதரவு வாக்குகள் சிதறியது. இதனால், தென்மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கி சரிவை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் எதிர்காலத்திற்காக ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோரை கட்சிக்குள் ஒன்றிணைக்க வேண்டும், இழந்த வாக்கு வங்கியை அதிகரிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மாஜிக்கள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வருவதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், அண்மையில் எழுந்த செங்கோட்டையனின் கலகக் குரலானது சசிகலாவை கட்சிக்குள் இணைத்தால் கழகத்திற்கான குரலாக மாறவும் தயாராக இருப்பதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
ஆனால், ஒன்றிணைப்புக்கு எடப்பாடியார் மறுக்கும் பட்சத்தில், தென்மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முக்கிய நிர்வாகிகளை வெளிப்படையாக பேச வைக்கும் முயற்சியில் சசி அண்ட் கோ இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அதன் உச்சக்கட்டமாக தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியாக, மதுரை உசிலம்பட்டியில் மிகப் பிரமாண்டமாக விழா ஒன்றை நடத்தி நலத்திட்ட உதவைகளை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, இந்த விழாவில் எடப்பாடிக்கு எதிரான மனநிலையில் உள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
சசிகலாவை பொறுத்தவரை, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அதிமுக ஒன்றிணையும் என்று உறுதியாக நம்புவதாகவும், ஆனால் தன்னால் 2027 ஆம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் 2028 ஐ குறிவைத்து காய்களை நகர்த்துவதோடு, அதிமுகவின் பொதுச் செயலாளராக உருவெடுப்பது தொடர்பாகவும் டெல்லி தலைமையிடம் டீலிங்கை முடித்துள்ளதாகவும் உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
தென்மாவட்டங்களைச் சேர்ந்த மாஜி அமைச்சர்கள், மாஜி எம்பி, மாஜி எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் சசிகலாவுடன் இன்னும் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், சசிகலாவின் முன்னெடுப்பு எடப்பாடியாரை நிச்சயம் அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சசிகலா மதுரை உசிலம்பட்டியை தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்று விசாரித்த போது, முக்குலத்தோர் சமுதாயத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மக்கள் அதிகம் இருக்கும் இடமாக மதுரை உசிலம்பட்டி உள்ளது என்றும், அதே சமுதாயத்தைச் சேர்ந்த சசிகலா நின்றால் நிச்சயம் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றும் கள நிலவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அதோடு, கட்சி சார்பாக நின்று போட்டியிட்டால் 90 சதவிகிதம் வாக்குகள் பெற்று சசிகலா வெற்றி பெறுவார் என்று கூறப்படும் அதேவேளையில், பணப் பலத்துடன் சுயேட்சையாக நின்றாலும் 90 சதவிகித வாக்குகள் பெற்று சசி வெற்றி பெறுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ள தொகுதியாக உசிலம்பட்டி இருப்பதாகவே கூறப்படுகிறது. தேர்தல் அரசியலில் ஒருவேளை சசிகலா களமிறங்கினால், எதிர்த்து நிற்கும் பிற கட்சிகளின் வெற்றி வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
தென்மாவட்ட அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசி அண்ட் கோ களமிறங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அந்த கணக்கின் அடிப்படையில் தான் உசிலம்பட்டியில் இருந்து தனது 'தேர்தல்' வியூகத்தை சசிகலா தொடங்க இருப்பதாக அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.