உலகம் முழுவதுமே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது என யுனிசெப் தரவுகள் கூறுகிறது. அதிலும் இந்தியாவில் 2022ஆம் ஆண்டின் நிலவரப்படி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 8 புள்ளி 7 சதவீதம் அதிகரித்திரித்துள்ளதாகவும், அந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 62 ஆயிரம் பாலியல் குற்றங்கள் பதிவானதாகவும் NCRB ரிப்போர்ட் சொல்கிறது.
2021ம் ஆண்டில் இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 51 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மூன்றில் ஒரு பங்கு தென்னிந்தியாவில் அரங்கேறி இருப்பதாக தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது தென் மாநிலங்களில் மட்டும் சுமார் 13 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு நான்காயிரத்து ஐநூறு வழக்குகளுடன் முதலிடத்திலும் உள்ளது. இவ்வாறு குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கக்கூடிய மாநிலம் என்ற பெயரை பெற்றுள்ளது தமிழ்நாடு.
இதற்கும் மேலாக, சமீப நாட்களாக பள்ளி வளாகம், பொதுவெளிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவற்றை எல்லாம் தடுக்க சட்டம் இல்லையா என்றால், நிச்சயம் இருக்கிறது. போக்சோ என்ற கடுமையான சட்டம் தான் அது. ஆனால் பல போக்சோ வழக்குகள் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளதால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் நீதி தாமதமாகவே கிடைக்கிறது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நதியாவிடம் கேட்டோம், “பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அந்த சட்டத்தின் மேல் பயம் வருவதில்லை” என்றார்..
ஒருபுறம் நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் அந்த சம்பவத்தில் இருந்து மீள முடிகிறதா என எவரும் யோசிக்க முடியாத சூழல் நிலவுவதாக கூறுகின்றனர் உளவியல் நிபுணர்கள்..
குழந்தைகளுக்கு சிறு வயது முதலே Good touch, Bad touch போன்றவை சொல்லிக் கொடுக்கப்பட்டாலும் கொடூர குற்றங்களில் ஈடுபடுவோரின் மனநிலை மாறுவதில்லை. இதனால் பெண் குழந்தைகளையும், பெண்களையும் பாதுகாக்க சமூகத்தில் கட்டாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதிகரிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.