சசிகலாவின் அரசியல் ஆட்டம்.. 2வது இன்னிங்ஸ் ஆரம்பம்.. அதிமுக ஒருங்கிணையுமா? என்ன செய்வார் இபிஎஸ்?

Sasikala Tour From Tenkasi : சசிகலாவின் அரசியலில் 2வது இன்னிங்ஸ் ஆரம்பமாகியிருக்கிறதாம். தன்னுடைய ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்திப்பதற்காக, இன்று முதல் சுற்றுப்பயணத்தை துவங்கியிருக்கிறார் சசிகலா.

Jul 17, 2024 - 19:37
Jul 18, 2024 - 10:41
 0
சசிகலாவின் அரசியல் ஆட்டம்.. 2வது இன்னிங்ஸ் ஆரம்பம்.. அதிமுக ஒருங்கிணையுமா? என்ன செய்வார் இபிஎஸ்?
Sasikala

சென்னை: ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு படுதோல்வியை சந்தித்து வரும் அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே 2026 சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க முடியும் என்று கூறி வரும் சசிகலா தனது அரசியல் பயணத்தின் அடுத்த இன்னிங்ஸை தென்காசியில் இருந்து ஆரம்பித்து விட்டார். 

ஜெயலலிதா:

 எனக்குப் பிறகும் அதிமுக 200 ஆண்டுகள் வலிமையாக இருக்கும் என்று 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் பேசிய ஜெயலலிதா. அடுத்த மாதமே உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். என்ன பிரச்சினை என்று யாருக்கும் தெரியாமலேயே  அதே ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அவரது மரணம் நிகழ்ந்தது. துடுப்பு இல்லாத படகு போல ஆனது அதிமுக. சின்னம்மாதான் எல்லாமே என்று சசிகலாவை சரணடைந்தனர். ஜெயலலிதாவினால் ஒதுக்கி வைக்கப்பட்ட விரட்டி விடப்பட்டவர்கள் எல்லாம் மீண்டும் அதிமுகவிற்கு வந்தனர். 

சசிகலா சாம்ராஜ்ஜியம்:

போயஸ்கார்டனில் சசிகலாவின் ராஜ்ஜியம் ஆரம்பமானது. அதே நேரத்தில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய கையோடு முதல்வராகவேண்டும் என்ற ஆசையும் சசிகலாவிற்கு தோன்றியது. ஓ.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்து விட்டு முதல்வராக திட்டம் போட்டார் சசிகலா. பதவியை ராஜினாமா செய்த கையோடு தர்மயுத்தம் தொடங்கினார் ஓ.பன்னீர் செல்வம். அவர் பின்னாலும் சில எம்எல்ஏக்கள் செல்லவே அதிமுக பிளவு பட்டது. 

சசிகலா சபதம்: 

முதல்வர் கனவில் இருந்த சசிகலாவிற்கு சிறைக்கதவுகள் காத்துக்கொண்டிருந்தன.  தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு சசிகலாவின் கழுத்தில் கத்தியாக இறங்கியது. 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்து விட்டு பெங்களூரு சிறைக்கு போனார். சிறைக்கு போகும் போதே ஜெயலலிதாவின் சமாதிக்கு போய் மூன்று முறை அடித்து சத்தியம் செய்து விட்டு போனார் சசிகலா. அதன்பிறகு நடந்ததை தமிழ்நாட்டு அரசியலே அறியும்.

ஓரங்கட்டப்பட்ட டிடிவி தினகரன்:

டிடிவி தினகரனை ஓரங்கட்டி விட்டு அதிமுகவை ஓ.பன்னீர் செல்வம் துணையோடு கைப்பற்றினார் எடப்பாடி பழனிச்சாமி. இரட்டைக்குழல் துப்பாக்கிகள் போல செயல்படுவதாக கூறினர். சசிகலா குடும்பத்தினர் யாரையும் நெருங்க விடவில்லை. இந்த சூழ்நிலையில்தான் டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்தார். 

நமத்து போன பட்டாசு: 

சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அரசியலில் அதிரடி ஆட்டத்தை ஆரம்பிப்பார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்க, அவரே தண்ணீரில் நனைந்த பட்டாசு போல அமைதியாக இருந்து விட்டார். பாயிண்ட் வரட்டும் என்றும் காத்திருந்த சசிகலா அவ்வப்போது அறிக்கை விடுவதோடு நிறுத்திக்கொள்வார். சில நேரங்களில் திடீரென அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூட அறிக்கை வெளியிடுவார். திடீரென ஆன்மீக பயணம் சென்று தொண்டர்களை சந்திப்பார். 

அதிமுகவின் தொடர் தோல்விகள்: 

2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டசபைத் தேர்தல் மட்டுமல்லாது உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் என பல தேர்தல்களை சந்தித்த அதிமுக ஒவ்வொரு முறையும் படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகுதான் ஒற்றைத்தலை விவகாரம் பூகம்பமாக உருவெடுத்தது. ஓ.பன்னீர் செல்வத்தை ஓரங்கட்டி விட்டு அதிமுகவின் ஏகபோக பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிச்சாமி. ஆக ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக பல துண்டுகளாக உடைந்தாலும் ஒன்றாக இருப்பதாக காட்டிக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. தொண்டர்கள் அதனை நம்பத் தயாராக இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் ஒவ்வொருமுறையும் காட்டி வருகின்றன. 

ஒருங்கிணைக்க கோரிக்கை: 

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்று ஆரம்பித்து பயணம் செய்தார் ஓ.பன்னீர் செல்வம் ஆனாலும் அவரால் மக்களவைத் தேர்தலில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியைத்தான் சந்திக்க முடிந்தது. 40 இடங்களிலும் அதிமுக தோல்வியடையவே ஒருங்கிணைத்தால் மட்டுமே சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற குரல் கேட்க ஆரம்பித்து விட்டது. அதற்காக ஒரு குழு கிளம்பவே, இனியும் சும்மா இருக்கக் கூடாது என்று நினைத்த சசிகலா தனது அரசியல் பயணத்தின் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்து விட்டார். 

ஆடியில் புறப்பட்ட சசிகலா:

சூரியன் தென்திசை பயணத்தை ஆரம்பிக்கும் ஆடி மாதம் முதல்நாளான இன்றைய தினம் சசிகலா தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். அதனை வரவேற்று போஸ்டர்களை ஒட்டியுள்ளனர் அதிமுகவினர். ஆட்டம் போட்ட கூட்டம் அடங்கி விட்டது சின்னம்மாவின் பாரிவேட்டை ஆரம்பம் என்று அந்த போஸ்டரில் எழுதியுள்ளனர் சசிகலாவின் ஆதரவாளர்கள். 

பிரம்மாண்ட வரவேற்பு: 

பிரிந்திருந்த டிடிவி தினகரன், திவாகரன் என குடும்பத்தினரை ஒருங்கிணைத்த கையோடு அதிமுகவை ஒருங்கிணைக்க தென்காசியில் இருந்து பயணத்தை தொடங்கியுள்ள சசிகலாவிற்கு வரவேற்பு கொஞ்சம் பலமாகத்தான் இருந்தது. 15 அடி உயர ரோஜாபூ மாலையை அணிவித்து அமர்க்களப்படுத்தி விட்டனர். அதிமுகவை ஒருங்கிணைக்கப்போகிறேன் என்று கிளம்பியுள்ளார் சசிகலா. கட்சியிலேயே இல்லாத சசிகலா அதிமுகவை எப்படி ஒருங்கிணைக்க முடியும் என்று கேட்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. கட்சிக்கு துரோகம் செய்த ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் எப்படி அதிமுகவிற்குள் சேர்க்க முடியும் என்றும் கேட்கிறார்.

அதிமுக ஒன்றிணையுமா?

முன்னாள் அமைச்சர்கள் பலரும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் விரும்புகின்றனர். 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 20 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. சிதறுண்டு இருக்கும் அதிமுக மீண்டும் வீறுகொண்டு எழுமா? அல்லது திமுக சரித்திர சாதனையாக இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி அரியணை ஏறுமா? காலம்தான் பதில் சொல்லும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow