சங்கரன்கோவில் ஆடித்தபசு.. ஊசி முனையில் தவமிருக்கும் கோமதி அம்மன்.. தரிசித்தால் தோஷம் நீங்கும்

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம் காலசர்ப்ப தோஷம் போக்கும் ஸ்தலமாகவும், ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது. செவ்வாய் தோஷத்தை நீக்கி திருமணத்தடை அகற்றும் ஸ்தலமாகவும் சங்கரன்கோவில் விளங்குகிறது . சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த தினத்தை நினைவுகூரும் வகையில் இவ்விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

Jul 9, 2024 - 14:51
Jul 9, 2024 - 15:35
 0
சங்கரன்கோவில் ஆடித்தபசு.. ஊசி முனையில் தவமிருக்கும் கோமதி அம்மன்.. தரிசித்தால் தோஷம் நீங்கும்
Sankarankoil Aadi Tabasu festival 2024

இந்த ஆண்டிற்கான ஆடித்தபசு திருவிழா நாளை மறுநாள் 11ஆம் தேதி வியாழக்கிழமை சங்கரநாராயணர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 19ஆம் தேதி தேரோட்டமும் 21ஆம் தேதியன்று அம்மன் ஊசி முனையில் தவமிருக்கும் தபசு விழாவும் நடைபெறும். 

தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண்தலமாக போற்றப்படுவது சங்கரன் கோவில். இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள். சங்கன் பதுமன் என்ற இரண்டு நாகங்கள் கோமதி அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம் விஷ ஜந்துக்களினால் ஏற்படும் பயம் நீங்கும்.

இது தசமஹா வித்யா பீடத்தில் சோடஷி பீடமாகும் . அன்னை சோடஷி ரூபமாக ஸ்ரீ லலிதாமஹா திரிபுர சுந்தரியாக, காமேஸ்வரியாக காட்சி தருகிறாள். அன்னையின் நான்கு கரங்களில் பாசம் அங்குசம் வைத்துள்ள மேல் இரு கைகளும் மற்றும் கரும்பு வில்லும் இங்கு அரூபமாக உள்ளன . அவற்றை நாம் நம் கண்களால் காண முடியாது என்றும், தவ வலிமை பெற்ற யோகிகளால் மட்டுமே அவற்றை காண முடியும் என்றும் , யாருக்கு அந்த தரிசனம் கிடைக்கபெறுகிறதோ அவர்களுக்கு அஷ்டமா சித்திகளும் வசப்படும் என்றும் கூறப்படுகிறது.

அம்பிகையின் சஹஸ்ராரம் விழுந்த ஆலயம் என்பதால் அன்னை இங்கே மஹா யோகினியாக , தபஸ் ஸ்வரூபிணியாக காட்சியளிக்கிறாள் . அம்பிகை சன்னதியின் முன்பு ஆக்ஞா சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது . இதில் அமர்ந்து வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். மனநிலை சரியில்லாதவர்கள் , பேய் பிசாசு மற்றும் துர்சக்தியால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த சக்கரத்தின் மேல் அமர்ந்து குணமடைந்து செல்கின்றனர்.

அன்னை அம்பிகை ஹரியும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்த , ஸ்ரீ சங்கர நாராயண கோலம் காண இந்த ஸ்தலத்தில் தவம் இயற்றினாள். ஆடி பௌணமி உத்தராட நக்ஷத்திர தினத்தில் ஸ்ரீ சங்கரநாராயண தரிஷனம் அன்னை கோமதிக்கு கிட்டியது . இதை உணர்த்தும் விதமாக இங்கே ஆடி தபசு பிரம்மோற்சவம் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு திருவிழா வரும் 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. காலை: 4.30 முதல் 5.30 வரை கொடியேற்றம் நடைபெறும் போது கோமதி அம்பாள் சிவிகையில் எழுந்தருளுவார். இரவு ஸ்ரீ கோமதி அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளுவார். 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெறும். 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆடி தபசு திருவிழா அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் கும்ப அபிஷேகம்  பாணகம், திருக்கண் தபசு மண்டபத்தில் சிறுபருப்பு நெய்வேத்தியம் செய்யப்படும். மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை  தங்க சப்பரத்தில் ஸ்ரீ கோமதி அம்பாள்  ஆடி தபசு மண்டகப்படி எழுந்தருளல்

மாலை 4.30 மணிக்கு பிறகு ஸ்ரீ சங்கரநாராயணசுவாமி தவசு காட்சி புறப்பாடு. ஸ்ரீ சங்கரநாராயணசுவாமி ரிஷப வாகனத்தில்  ஸ்ரீ கோமதி அம்பாளுக்கு தவசு காட்சி அளிப்பார்.இரவு  ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்மனுக்கு காட்சி அளிப்பார்.ஜூலை 23 முதல் ஜூலை 25 வரை 3 நாட்களுக்கு மாலை சுமார் 7 மணிக்கு ஊஞ்சல் நடைபெறும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow